நடுக்கடலில் பரபரப்பு: விசைப்படகு பழுது; 23 குமரி மீனவர்கள் தவிப்பு
Views - 298 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு கரை திரும்புவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால் விளை பகுதியை சேர்ந்தஅருள்ராஜன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான படகு மூலம் 23 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
பரிதவிப்பு
அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். காலை 11.30 மணியளவில் திடீரென விசைப்படகின் என்ஜின் பழுதானது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கரை திரும்ப முடியாமல் பரிதவித்தனர். உடனே, இதுபற்றி படகின் உரிமையாளர் அருள்ராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சின்னமுட்டத்தில் இருந்து அனைத்து படகுகளும் நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால், நடுக்கடலில் பரிதவிக்கும் மீனவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை மீன்பிடிக்க சென்ற சக விசைப்படகுகள் இரவு கரை திரும்பியதை தொடர்ந்து, அருள்ராஜன் மற்றொரு விசைப்படகு மூலம் பழுதான விசைப்படகையும், அதில் உள்ள மீனவர்களையும் மீட்க புறப்பட்டார். இன்று காலையில் மீட்கப்பட்டு 23 மீனவர்களும் பத்திரமாக கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.News