" “If opportunity doesn't knock, build a door.”"

தந்தையை கொன்றவருக்கு சொத்து கிடையாது என நீதிபதி தீர்ப்பு: கோர்ட்டு உத்தரவுப்படி நிலம் அண்ணனிடம் ஒப்படைப்பு

Views - 295     Likes - 0     Liked


  • மேலகிருஷ்ணன்புதூர், 

    கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 72). இவர் நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சுகுமாரி, வேல்விழி, வசந்தி, செல்வன், விஜயகுமார் ஆகிய 5 பிள்ளைகள் உண்டு. இதில் வசந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர். விஜயகுமார் திருமணமாகி சுசீந்திரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி சென்று சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. 

    அதன்படி கடந்த 19-3-14 அன்று இரவு பொன்னையா வீட்டுக்கு விஜயகுமார் சென்றுள்ளார். அப்போது சொத்து தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார், வீட்டில் இருந்த துணி உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்துள்ளார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல் தனது தந்தை பொன்னையாவை அதே தீயில் தள்ளி கொலை செய்துள்ளார்.

    இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கிடையே தந்தை இறந்த துக்கம் தாங்காமல் சுகுமாரியும், வேல்விழியும் இறந்து விட்டனர். இதனால் மனநிலை பாதிக்கப்பட்ட வசந்தியை, செல்வன் கவனித்து வருகிறார்.

    பொன்னையா கொலை வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு கூறினார். அதில் தந்தையை கொன்ற விஜயகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதோடு பொன்னையாவுக்கு சொந்தமான சொத்தை விஜயகுமாருக்கு கொடுக்காமல் பிற வாரிசுகளுக்கு கொடுக்கவும் உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று முன்தினம் அவரது சொத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது. அவருக்கு சுசீந்திரம் பகுதியில் 7 இடத்தில் மொத்தம் 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதை கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் மீனா, சுசீந்திரம் வருவாய் ஆய்வாளர் பிரபா மற்றும் போலீசார் முன்னிலையில் அளவீடு செய்து விஜயகுமாரின் அண்ணன் செல்வனிடம் ஒப்படைத்தனர். மேலும் அளவீடு செய்யப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகையும் அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

    News