நாகர்கோவிலில் சாலைகளை விரிவாக்கம் செய்ய நிலம் அளவீடு பணி தொடக்கம்
Views - 334 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகரில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நகரில் உள்ள குறுகிய சாலைகள் தான். போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக நகரில் உள்ள முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன்படி நகரில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சாலைகள் பற்றி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனை முடிவில், கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் ஆலய சந்திப்பு வரை செல்லும் சாலை, சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு சாலை மற்றும் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து பறக்கை விலக்கு வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த சாலை விரிவாக்கப்பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பணி தொடங்கப்பட்டதும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் கோவில் நிர்வாகிகளை சந்தித்து சாலை விரிவாக்கம் குறித்து பேசினர். சாலை விரிவாக்கப் பணிகளுக்கு கோவில் நிலங்களை வழங்க நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் பட்டா நிலங்கள் வைத்திருப்போரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, நகர அமைப்பு அதிகாரி விமலா தலைமையில் நகர அமைப்பாளர்கள் சந்தோஷ், துர்காதேவி, மகேஸ்வரி, கெவின் ராஜ் ஆகியோர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் ஆலய சந்திப்பு வரையிலான சாலை விரிவாக்கத்திற்கான நிலங்களை நேற்று அளவீடு செய்தனர். தற்போது இந்த சாலை 34 அடியாக உள்ளது. கூடுதலாக 10 அடி வரை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.News