திக்குறிச்சி கோவில் கொள்ளை வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றக்கோரி இந்து முன்னணி போராட்டம்
Views - 262 Likes - 0 Liked
-
குழித்துறை,
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்களில் 2–வது சிவாலயமாக திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31–ந் தேதி நள்ளிரவு கோவிலின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மகாதேவரின் ஐம்பொன் சிலை, திருமுகம், திருவாச்சி என வரலாற்று சிறப்புமிக்க பழமையான பொருட்கள் மற்றும் உண்டியல் பணம்–நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், ஓராண்டை நெருங்கும் நிலையிலும், அந்த வழக்கு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை. கொள்ளையர்களும் கைது செய்யப்படவில்லை. மேலும், பழமையான சிலை மற்றும் பொருட்கள் கொள்ளை போனதால், இந்த வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என ஆரம்பம் முதலே பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றக்கோரியும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் இந்து முன்னணியினர் மற்றும் பக்தர்கள் சார்பில் திக்குறிச்சி மகாதேவர் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மேல்புறம் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரெங்ககுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மிசாசோமன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், நிர்வாகிகள் ராஜன், கண்ணன், ராஜேஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.News