நாகர்கோவிலில் நீச்சல் குளங்களை ஆய்வு செய்வது குறித்த ஆலோசனை 15 நாட்களில் கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு
Views - 278 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நீச்சல் குளங்களில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அதனை பாதுகாப்பான முறையில் அமைக்க தமிழக அரசு 2015-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதன்படி முறையான ஆவணங்களுடன் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா? என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் விளையாட்டு அரங்கம், ஓட்டல்கள், திருமண மண்டபம் என 7 இடங்களில் நீச்சல் குளங்கள் முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்ட 7 நீச்சல் குளங்களின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் நீச்சல் குளங்கள் முறையான ஆவணங்களுடன் செயல்பட்டு வருகிறதா? என ஆய்வு செய்ய கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என 11 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். இதில் நகர அமைப்பு அலுவலர் விமலா, என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்த குழுவினர் 15 நாட்களில் அனைத்து நீச்சல் குளங்களையும் ஆய்வு செய்து கலெக்டரிடம் அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.News