தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
Views - 336 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை நடத்தவும், அதற்கான உரிமம் பெறவும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 31-8-19-க்கு முன்னதாக, மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இதனால் அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம் 6 பிரதிகளும், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள் 6 பிரதிகளும், உரிய கணக்கு தலைப்பின் கீழ் அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் ரூ.500-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டையும் இணைக்க வேண்டும்.
ஆவணங்கள்
மேலும் மனுதாரர் தற்காலிக பட்டாசு உரிமம்கோரும் இடத்தின் உரிமையாளர் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் என்றால் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதமும், விண்ணப்பதாரரின் 2 புகைப்படங்கள், முகவரி சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு வருகிற 31-ந் தேதிக்கு பின்னர் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கத்தில் இ-சேவை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.News