நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
Views - 353 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கக்கூடாது, ‘நெக்ஸ்ட்’ தேர்வை கைவிட வேண்டும், புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.அதன் தொடர்ச்சியாக நேற்று அவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டமும் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க குமரி மாவட்ட நிர்வாகி சண்முக பாரதி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் யாதவ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் மருத்துவ மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று நாகர்கோவிலில் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் மருத்துவ மாணவ- மாணவிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 11 மணி வரை நடந்தது.
இன்றும் (வியாழக்கிழமை) வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவர் சங்கத் தலைவர் யாதவ் தெரிவித்தார்.News