" “If opportunity doesn't knock, build a door.”"

தென்தாமரைகுளம் அருகே துணிகரம் துறைமுக அதிகாரி வீட்டில் கொள்ளை

Views - 280     Likes - 0     Liked


  • தென்தாமரைகுளம்,

    தென்தாமரைகுளத்தை அடுத்த முகிலன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 69). இவர் துறைமுகத்தில் மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் தங்கியுள்ளார்.முகிலன்குடியிருப்பில் உள்ள செல்லத்துரை வீடு பூட்டிய நிலையில் கிடந்தது. இந்த நிலையில் நேற்று காலை செல்லத்துரை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், தூத்துக்குடியில் வசித்து வரும் செல்லத்துரை குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் தூத்துக்குடியில் இருந்து முகிலன்குடியிருப்புக்கு வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

    கொள்ளை

    பீரோவில் இருந்த வெள்ளி காமாட்சி விளக்கு மற்றும் எல்.இ.டி. டி.வி. மாயமாகி இருந்தது. மேலும் வீட்டில் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    இதுபற்றி செல்லத்துரை தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மற்றொரு சம்பவம்

    அப்போது செல்லத்துரை வீட்டருகே வசித்து வரும் சன்னி விநாயகம் (72) என்பவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. சன்னி விநாயகம் சென்னையில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வரும் போது மட்டும் இந்த வீட்டில் தங்குவார்.

    மற்ற நேரங்களில் வீடு பூட்டியே கிடக்கும். இந்த வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். ஆனால் அங்கு விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பொருட்களை ஆங்காங்கே வீசி சென்றுள்ளனர்.

    மக்கள் பீதி

    இந்த 2 கொள்ளை சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொள்ளையர்கள், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவில் சிக்கி இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்தனர். தென்தாமரைகுளம் பகுதியில் சமீப காலமாக பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு முகிலன்குடியிருப்பில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கொள்ளை நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஓய்வு பெற்ற துறைமுக அதிகாரி உள்பட 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது.

    News