" “If opportunity doesn't knock, build a door.”"

பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

Views - 278     Likes - 0     Liked


  • அருமனை, 

    பேச்சிப்பாறை அணையை சீரமைப்பது மற்றும் கூடுதல் ஷட்டர்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. சீரமைப்பு பணியின் போது அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியை சிறிது விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளது. அதற்காக அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதாவது பேச்சிப்பாறை அணை சீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள 48 வீடுகளை அகற்ற கடந்த ஒரு வருடமாக வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அதில் எத்தனை வீடுகளை அகற்றுவது என்று கணக்கீடு செய்தனர். அப்போது 48 வீடுகளை அகற்றுவது என்று பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.

    ஆக்கிரமிப்பு அகற்றம்

    ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்தவர்களுக்கு சமத்துவபுரம் பகுதியில் தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. ஆனால் சீரோ பாயிண்ட் பகுதியில் வசித்த மக்கள், நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். எனவே வீடுகளை காலி செய்ய மாட்டோம். மேலும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் போதிய வசதி இல்லை என்று கூறி அங்கு குடியேற மக்கள் மறுத்து விட்டனர்.

    இதற்கிடையே 48 வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோதங்கராஜ், ஆஸ்டின், சுரேஷ்ராஜன் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இருந்தாலும் அறிவிக்கப்பட்டபடி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    மக்கள் தவிப்பு

    இதனால் நேற்று காலை முதலே பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியன், விளவங்கோடு தாசில்தார் புரேந்திர தாஸ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீடுகள் இடிக்கும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதனால் வீடுகளில் குடியிருந்த மக்கள் செய்வதறியாது திகைத்தனர். சில வீடுகளில் பொருட்கள், வெளியேற்றப்படாமலே இடித்து தள்ளப்பட்டன. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய பொருட்களை ஓடி ஓடி எடுத்தனர். குடியிருக்க மாற்று இடம் இல்லாமல் முதியோர்களும், பெண்களும் கதறி அழுதது, பார்ப்போரை கண்கலங்க செய்தது.

    48 வீடுகளும் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. வீடுகளை இழந்த மக்கள் அங்குள்ள சாலையோரம் தங்களது பொருட்களை குவித்து வைத்து தார்ப்பாயால் மூடி வைத்துள்ளனர். அவர்களுக்கு உடனே மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    News