குமரி மாவட்டத்தில் காவலர் தேர்வை 7,369 பேர் எழுதினர் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு ஆய்வு
Views - 319 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
தமிழகத்தில் 2019-20-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது.
அதே போல குமரி மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி, குமரி மெட்ரிகுலேஷன் உயர் நிலைப்பள்ளி, சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, வின்ஸ் மகளிர் கல்லூரி, வின்ஸ் ஆண்கள் கல்லூரி ஆகிய 8 மையங்களில் நடைபெற்றது. இதில் இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் பெண்கள் மட்டுமே தேர்வு எழுதினர்.கடுமையான கட்டுப்பாடுகள்
குமரி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வுக்கு 9,050 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 7,369 பேர் தேர்வு எழுதினார்கள். மீதம் உள்ள 1,681 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11.20 மணி வரை நடந்தது.
தேர்வின்போது கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன. அதாவது தேர்வுக்கூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அனுமதி சீட்டை கொண்டு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மேலும் செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்களையும் தேர்வு எழுதும் அறைக்குள் எடுத்து செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
ஓடோடி வந்த தேர்வர்கள்
மேலும் பென்சில் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக நீலம் மற்றும் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை தேர்வர்கள் கொண்டு சென்றனர். இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையம் உள்பட சில மையங்களில் தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தேர்வு எழுதுபவர்கள் சிலர் ஓடோடி வந்ததை காண முடிந்தது.
திருமணமான பெண்கள் தங்களுடைய குழந்தையையும் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்திருந்தனர். பின்னர் குழந்தையை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு தேர்வு அறைக்கு சென்றனர்.
டி.ஐ.ஜி. ஆய்வு
காவலர் எழுத்து தேர்வை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு ஒவ்வொரு மையத்துக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதே போல குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.News