" “If opportunity doesn't knock, build a door.”"

ஐகோர்ட்டு உத்தரவுப்படி மீன்பாசி குத்தகை உரிமத்தை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் மனு

Views - 377     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 
     
    தேரூர் தென்குமரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஜேசுராஜன் (வடசேரி), ஜோனி (நாகர்கோவில்), மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணை தலைவர் ஷாஜின், மாவட்ட மீன்தொழிலாளர் சங்க துணை தலைவர் மரிய ஜார்ஜ், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் (சி.ஐ.டி.யு.) அந்தோணி உள்பட பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
    தேரூர் தென்குமரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் 1964-ம் ஆண்டு தொடங்கிய காலத்தில் இருந்து தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மீன்பாசி குத்தகை ஆணை பெற்று சங்க உறுப்பினர்களுக்கு குத்தகை அடிப்படையில் குளங்கள் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 650 உறுப்பினர்களும், வடசேரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் 305 உறுப்பினர்களும், நாகர்கோவில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் 114 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் உள்ள மீன்பிடி தொழிலையே முழுமையாக நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.
     
    தமிழக அரசு உத்தரவுப்படி அகஸ்தீஸ்வரம் தாசில்தார் செயல்முறை நடவடிக்கை மூலம் மீன்பிடிப்பு குத்தகை உரிமை ஆணை மற்றும் பொதுப்பணித்துறை அரசாணை அடிப்படையில் சங்கத்துக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளின் கரையை பலப்படுத்தவும், ஆழப்படுத்தவும் கலுங்கு, மதகு மற்றும் பாசன அமைப்பு கட்டுமான அமைப்புகளின் பராமரிப்பு பணிகளுக்காக பொதுப்பணித்துறைக்கு குத்தகை தொகை செலுத்த அரசாணையின்படி 50 சதவீதம் இன்று வரை கடன் பாக்கி இல்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தாசில்தாரின் குத்தகை உரிமத்தின்படி பொதுப்பணித்துறைக்கு ரூ.14 லட்சத்து 31 ஆயிரத்து 745-ம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 332-ம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 416-ம் ஆக மொத்தம் ரு.28 லட்சத்து 63 ஆயிரத்து 493 குத்தகை தொகையாக செலுத்தப்பட்டுள்ளது.
     
    தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள தேரூர் தென்குமரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியிருந்தோம். மனுமீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் உரிய நிவாரணம் தேடி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தோம். எங்கள் மனுமீது உரிய முறையில் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு மீன்பாசி குத்தகை வழங்க கடந்த மாதம் 8-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
     
    அதன்படி தேரூர் தென்குமரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும், வடசேரி, நாகர்கோவில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களும் பயன்பெறும் வகையில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள அனைத்து குளங்களையும் தேரூர் தென்குமரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு மீன்பாசி குத்தகை உரிமத்தை வழங்க வேண்டும்.
     
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    News