நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரையில் டால்பின் கரை ஒதுங்கியது மீனவர்கள் மீட்டு ஆழ்கடலில் விட்டனர்
Views - 368 Likes - 0 Liked
-
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரையில் நேற்று காலை 11 மணியளவில் ஒரு டால்பின் மீன் அலையில் மிதந்தபடி கரை ஒதுங்கியது. அது மணல்பரப்பில் சிக்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அந்த டால்பின் 8 அடி நீளத்தில், சுமார் 140 கிலோ எடை இருந்தது. இதை அந்த பகுதியில் நின்ற மீனவர்கள் பார்த்தனர். பின்னர் சுற்றுவட்டார மீனவ கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர்.இதையடுத்து அனைவரும் சேர்ந்து டால்பினை, மீண்டும் கடலுக்குள் விடுவது என முடிவெடுத்தனர்.
ஆழ்கடலில் விட்டனர்
பின்னர் மீனவர்கள் டால்பினை மீட்டு படகில் ஏற்றி ஆழ்கடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு பத்திரமாக கடலுக்குள் இறக்கி விட்டனர்.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-
கடலில் மீன்பிடிக்கும் எங்களுக்கு டால்பின் காவல் தெய்வம் மாதிரி. இது மனிதர்களை போன்று மதிநுட்பம் கொண்டது. மனிதர்கள் யாராவது கடலில் தவறி விழுந்தால், டால்பின்கள் கூட்டமாக வந்து அவர்களை காப்பாற்றி கரை சேர்க்கும் பண்பு கொண்டது. அவ்வாறு மீனவர்களை டால்பின் காப்பாற்றிய சம்பவங்கள் பல நடந்துள்ளது.
இந்த வகை மீன்கள் பொதுவாக கூட்டமாகத்தான் செல்லும். அரபிக்கடல் பகுதியில் அதிக அளவு டால்பின் உள்ளன. இந்த டால்பின் மட்டும் தனது கூட்டத்தில் இருந்து எப்படியோ பிரிந்து கரை ஒதுங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.News