சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
Views - 350 Likes - 0 Liked
-
சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புவது வழக்கம்.இந்த துறைமுகத்தில் இருந்து செல்லும் ஒரு சில விசைப்படகுகள், நெல்லை மாவட்ட கடல் பகுதியில் கரையோரமாக மீன்பிடிப்பதாகவும், அதனால், நெல்லை மாவட்ட வள்ளம் மற்றும் கட்டுமரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கூத்தங்குழி, கூட்டப்புளி, இடிந்தகரை ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கருப்பு கொடிகள் கட்டிய 100-க்கும் மேற்பட்ட வள்ளத்தில் வந்து சின்னமுட்டம் துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகையிட்டனர்.
வேலை நிறுத்தம்
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 ரோந்து படகுகளில் வள்ளங்களில் வந்த மீனவர்களை துறைமுக பகுதிகளுக்குள் நுழைய விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நெல்லை மாவட்ட மீனவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்து இரு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற விசைபடகு மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.2-வது நாள்
இந்தநிலையில் நேற்று மீனவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் ஏலக்கூடம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், இந்த பிரச்சினை குறித்து சுமூக தீர்வுகாண வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விசைப்படகு சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
நடவடிக்கை
கன்னியாகுமரி பங்குபேரவை தலைவர் மைக்கேல், சின்னமுட்டம் பங்கு பேரவை தலைவர் சில்வஸ்டர் மற்றும் மீனவர்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், கோவளம் மற்றும் ஆரோக்கியபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 300 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. நாங்கள் கடலில் தங்கி மீன்பிடிக்க செல்லும் போது, நெல்லை மாவட்டம் கூட்டப்புளி, கூத்தன்குழி, இடிந்தகரை ஆகிய ஊர்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் எங்களை தடுத்து படகுகளை சேதப்படுத்துவதும், வலைகளை அறுப்பதும், படகுகளை இழுத்து சென்றுவிடுவோம் என்று மிரட்டுவதும் அடிக்கடி நடக்கிறது.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நெல்லை மாவட்ட மீனவர்கள் சுமார் 200 நாட்டுப்படகுகளில் சின்னமுட்டம் துறைமுகத்துக்குள் புகுந்தனர். நுழைவு வாயில் பகுதியில் கடலோர காவல் படையினர் தடுத்தும் கேட்காமல் ரோப்பை அறுத்துக்கொண்டு உள்ளே வந்தனர். மேலும் அவர்கள் அரிவாள், கம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களும், வெடி குண்டுகளும் வைத்துக்கொண்டு தகாத வார்த்தைகள் பேசி எங்கள் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்டனர்.இதுபற்றிய தகவல் கிடைத்து போலீசார் அங்கு இருந்ததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். மேலும் சின்னமுட்டம் துறைமுகத்துக்குள் புகுந்த நெல்லை மாவட்ட மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News