சென்னை சென்டிரல் ரெயில் நிலைய நடைமேடைகளில் ரோந்து பணியில் ஈடுபடும் ரெயில்வே பாதுகாப்புபடைக்கு நவீன வாகனம்
Views - 303 Likes - 0 Liked
-
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலைய நடைமேடைகளில், ரோந்து பணியில் ஈடு படும் ரெயில்வே பாதுகாப்புபடைக்கு நவீன வாகனத்தை அறிமுகப்படுத்தி, தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தொடங்கி வைத்தார்.சென்னை,தெற்கு ரெயில்வேக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையத்திலும் நேற்று மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ரெயில்வே அமைச்சகம் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை, பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளிடம் கடந்த மாதம் 11-ந்தேதியில் இருந்து தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் ஒரு முறை மட்டும் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், ரெயில் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு, ரெயில் நிலைய தூய்மை பணியினை தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். தூய்மை குறித்த தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக பொது மேலாளர் ஜான் தாமஸ் ‘சபாய்’ செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார்.இந்த செல்போன் செயலி மூலம் ரெயில் நிலையங்கள், ரெயில்களில் பயணிகள் தூய்மை குறித்த நிறைகுறைகளை தெரிவிக்கலாம். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புபடைவீரர்கள், ரெயில் நிலைய நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக ரூ.5 லட்சம் செலவில் ‘செக்வே’ எனப்படும் 6 நவீன வாகனங்களை ஜான் தாமஸ் தொடங்கி வைத்தார். அந்த வாகனத்தில் நடைமேடைகளில் ரெயில்வே பாதுகாப்புபடையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.இதன் மூலம் அவசர கால நேரங்களில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் விரைந்து செயல்பட்டு, பயணிகளுக்கு உதவ முடியும். இந்த வாகனம் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் இயங்கும். இதில் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 கி.மீ வரை செல்லலாம். விரைவில் முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த நவீன ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் புதுப்பித்த பயணிகள் உதவியும் மையத்தை ஜான் தாமஸ் ஆய்வு செய்தார்.தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-ரெயில்களின் காலம் தவறாமை கடந்த ஆண்டு 72.7 சதவீதமாக இருந்தது. இது நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையிலும் 82 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 81 கி.மீ. தூர வழித்தடத்தில் 3 ஆயிரத்து 235 கி.மீ. தூரம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது 63.67 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு 239 கி.மீ. தூரம் மின்மயமாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை லெவல் கிராசிங்கை கடந்து செல்லும் வகையில் மாநில அரசோடு இணைந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற் கான பணிகள் இன்னும் 2 வார காலத்துக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.சென்னை எழும்பூர், திருச்சி, சேலம், மதுரை, கோட்டயம் மற்றும் பாலக்காடு உள்பட 6 ரெயில் நிலையங்களை ரூ.121 கோடியே 43 லட்சம் செலவில் புனரமைப்பு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.ரெயில் நிலையங்களில் எச்சில் உமிழ்ந்த 25 ஆயிரத்து 804 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.58 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ரெயில்களில் இருக்கும் காத்திருப்போர் பட்டியலை பொறுத்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். குளிரூட்டப்பட்ட (ஏ.சி.) மின்சார ரெயில் மும்பையில் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. சென்னையிலும் விரைவில் குளிரூட்டப்பட்ட மின்சார ரெயில் இயக்கப்படும்.தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதற்கான பணிகள் நிறைவடைந்து வருகிற மார்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது வழித்தடத்துக்கான பணிகள் நிறைவடைந்தால் கூடுதல் ரெயில் சேவைகள் இயக்கப்படும்.News