பள்ளிக்கூடத்துக்கு துப்பாக்கியுடன் வந்த ஆசிரியரால் பரபரப்பு போலீசார் கைது செய்தனர்
Views - 335 Likes - 1 Liked
-
பத்மநாபபுரம்,
திருவனந்தபுரம் காத்தாக்கடை பகுதியை சேர்ந்தவர் லாஜி மார்ட்டின் தாமஸ் (வயது 38). இவர் குமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு லாஜி மார்ட்டின் தாமஸ் கைத் துப்பாக்கியுடன் வந்துள்ளார். மேலும் அந்த கைத் துப்பாக்கியை மாணவர்களிடம் காட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் பள்ளி மேலாளருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளி மேலாளர் தக்கலை போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்து லாஜி மார்ட்டின் தாமசை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அந்த துப்பாக்கியை இணைய தளம் மூலம் ஆர்டர் செய்து வாங்கியது தெரிய வந்தது. பின்னர் அந்த துப்பாக்கியை போலீசார் பரிசோதனை செய்த போது அது பொம்மை துப்பாக்கி எனவும், அதே சமயத்தில் அந்த துப்பாக்கியை சுட்டால் அதிலிருந்து தீ வெளியேறியதும் தெரிய வந்தது. பொம்மை துப்பாக்கி என்றாலும், அதில் இருந்து தீ வெளியேறும்படி இருந்ததால் அபாயகரமான பொருளாக கருதப்பட்டது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாஜி மார்ட்டின் தாமசை ைகது செய்தனர். சுட்டால் தீ வெளியேறும் துப்பாக்கியை பள்ளிக்கூடத்துக்குள் கொண்டு சென்றதாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.News