ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி: இந்தியா-ரஷியா அணிகள் இன்று மோதல், பெண்கள் பிரிவில் இந்தியா-அமெரிக்கா பலப்பரீட்சை
Views - 340 Likes - 0 Liked
-
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் புவனேசுவரத்தில் இன்று நடைபெறும் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியா- ரஷியா அணியும், பெண்கள் பிரிவில் இந்தியா-அமெரிக்கா அணியும் மோதுகின்றன.புவனேசுவரம்,
2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆக்கி ஆட்டத்துக்கு ஆண்கள் பிரிவில் மண்டல போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான், அர்ஜென்டினா, தென்ஆப்பிரிக்கா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. தகுதி சுற்று மூலம் ஸ்பெயின், நெதர்லாந்து, கனடா ஆகிய அணிகள் தகுதி கண்டன. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி தகுதி சுற்றில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தது.இதேபோல் பெண்கள் பிரிவில் மண்டல போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான், அர்ஜென்டினா, தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக தகுதி கண்டன. தகுதி சுற்று மூலம் ஸ்பெயின், சீனா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இரு பிரிவிலும் தகுதி பெறும் எஞ்சிய 4 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதி சுற்று ஆட்டம் பல்வேறு இடங்களில் இன்று முதல் நாளை மறுநாள் வரை நடக்கிறது. இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது.
இதில் ஆண்கள் பிரிவில் இந்தியா-ரஷியா (இரவு 8 மணி) அணிகள் சந்திக்கின்றன. பெண்கள் பிரிவில் இந்தியா-அமெரிக்கா (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 முறை மோத வேண்டும். முதல் ஆட்டம் இன்றும், 2-வது ஆட்டம் நாளையும் நடக்கிறது. இதன் முடிவில் கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி பெறும் அணி வாய்ப்பை இழக்கும்.
மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது. டெனிஸ் ஸ்சிபாசெவ் தலைமையிலான ரஷிய அணி தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கிறது. நல்ல நிலையில் உள்ள இந்திய அணி, ரஷியாவை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் அணி தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கிறது. கேத்லின் ஷர்கே தலைமையிலான அமெரிக்க அணி தரவரிசையில் 13-வது இடம் வகிக்கிறது. அமெரிக்க அணி வலுவாக இருப்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் எனலாம்.இந்த போட்டி குறித்து இந்திய பெண்கள் அணி கேப்டன் ராணி ராம்பால் அளித்த பேட்டியில், ‘ஆசிய விளையாட்டு போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே நமது முதல் இலக்காக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அது நடக்காமல் போய் விட்டது. ஆசிய போட்டிக்கு பிறகு நமது முழு கவனமும் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி மீது தான் உள்ளது. இந்த போட்டிக்காக ஆண்டு முழுவதும் நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம். பெரிய அளவிலான உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். எங்களுக்கு நெருக்கடி எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்துவோம்’ என்று தெரிவித்தார்.News