" “If opportunity doesn't knock, build a door.”"

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா

Views - 319     Likes - 0     Liked


  • பெர்த்தில் நேற்று நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.
    பெர்த்,

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இப்திகார் அகமது (45 ரன், 37 பந்து, 6 பவுண்டரி), இமாம் உல்-ஹக் (14 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. கேப்டன் பாபர் அசாம் 6 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 106 ரன்களுக்கு முடங்கியது. வேகப்பந்து வீச்சாளர்கள் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க், சீன் அப்போட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும், பாகிஸ்தானின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அந்த அணி 11.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் திரட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை சுவைத்தது. முதல் ஓவரிலேயே 2 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிபிழைத்த வார்னர் 48 ரன்களுடனும் (35 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரோன் பிஞ்ச் 52 ரன்களுடனும் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 2-வது நிகழ்வாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணி தோல்வியே சந்திக்கவில்லை (7 வெற்றி, ஒரு முடிவில்லை) என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பை மழை கெடுத்தது. அதிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தால் 20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு முன்னேறி இருக்கும். மழை அதிர்ஷ்டத்தால் பாகிஸ்தான் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறது.

    அடுத்து ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

    News