" “If opportunity doesn't knock, build a door.”"

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஐதராபாத்தில் இன்று நடக்கிறது

Views - 330     Likes - 0     Liked


  • இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு நடக்கிறது.
    ஐதராபாத், 
     
    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    சமீபத்தில் வங்காளதேச 20 ஓவர் தொடரில் ஓய்வு எடுத்த இந்திய கேப்டன் விராட் கோலி இந்த தொடருக்கு திரும்பியுள்ளார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியை தயார்படுத்துவதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்தி வருவதால், ஒவ்வொரு வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிக்காட்ட முயற்சிப்பார்கள். குறிப்பாக லோகேஷ் ராகுல், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்படுவது முக்கியமாகும். காயத்தால் ஷிகர் தவான் விலகி இருப்பதால் அந்த வாய்ப்பை லோகேஷ் ராகுல் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார். முக்கியமான கட்டத்தில் விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் சொதப்பும் ரிஷாப் பண்ட் இந்த தொடரையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அதன் பிறகு அவரது இடத்துக்கு ஆபத்து வந்து விடும். அதனால் இந்த முறை மிகுந்த கவனமுடன் விளையாடுவார் என்று நம்பலாம்.
     
    பேட்டிங்கில் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் உள்ளிட்டோரும், பந்து வீச்சில் தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார், ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹலும் வலு சேர்க்கிறார்கள். அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெற்றாலும் தொடக்க ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
     
    சாதனையை நோக்கி பயணிக்கும் ரோகித் சர்மா இன்னும் ஒரு சிக்சர் அடித்தால், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்சர் அடித்த முதல் இந்தியர் என்ற மைல்கல்லை எட்டுவார்.
    ஆகஸ்டு மாதம் சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்த உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போது அதற்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மயர், லென்டில் சிமோன்ஸ், இவின் லீவிஸ், ஹோல்டர், கீமோ பால், பூரன் என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஒருங்கிணைந்து விளையாடும் பட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு கடும் சவாலாக திகழ்வார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவிக்கும் இளம் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன், அடுத்த ஆட்டத்தில் தான் களம் காண முடியும். எனவே தினேஷ் ராம்டின் இந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக செயல்படுவார். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் எப்போதும் அபாயகரமான ஒரு அணியாகும். அதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
     
    இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 8-ல் இந்தியாவும், 5-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
     
    இந்த மைதானத்தில் (ஐதராபாத்) சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். ஐ.பி.எல்.-ல் இங்கு நடந்த ஆட்டங்களின் போது ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைத்ததை பார்க்க முடிந்தது. இந்த முறையும் பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
     
    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர்.
     
    வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், லென்டில் சிமோன்ஸ், பிரன்டன் கிங், ஹெட்மயர், பொல்லார்ட் (கேப்டன்), தினேஷ் ராம்டின், ஜாசன் ஹோல்டர், கீமோ பால் அல்லது கேரி பியர், பாபியன் ஆலென், ஹேடன் வால்ஷ் ஜூனியர், ஷெல்டன் காட்ரெல்.
     
    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
     
    News