தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வென்றது
Views - 295 Likes - 0 Liked
-
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணி மீண்டும் தங்கப்பதக்கம் வென்றது. குத்துச்சண்டையில் இந்தியா 6 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியது.போக்ஹரா,
7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இந்திய அணி தரப்பில் பாலாதேவி 18-வது மற்றும் 56-வது நிமிடத்தில் கோல் அடித்தார். தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.குத்துச்சண்டை போட்டியில் நேற்று இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இதில் ஆண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் வினோத் தன்வார் 5-0 என்ற கணக்கில் பூடான் வீரர் தாஷி வாங்டியை ஊதி தள்ளி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 56 கிலோ பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சச்சின் 5-0 என்ற கணக்கில் வங்காளதேச வீரர் ராபினை தோற்கடித்து மகுடம் சூடினார். 91 கிலோ பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சவுகான் 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தானின் சனாலுல்லாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் மனிஷ் கவுசிக் (64 கிலோ) இறுதிப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் நேபாள வீரர் பூபேந்திர தபாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். 75 கிலோ பிரிவில் இறுதிப்போட்டியில் தேசிய சாம்பியனான இந்திய வீரர் அங்கித் கதனா 5-0 என்ற கணக்கில் இலங்கையின் தினேஷ் மதுரங்காவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.News