திருப்பதிசாரம் அரசு பண்ணையில் கன்னிப்பூ பருவ நெல் விதைகள் சுத்திகரிப்பு பணி கலெக்டர் பார்வையிட்டார்
Views - 334 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் அரசு விதைப்பண்ணையில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் குமரி மாவட்டத்துக்கு தேவையான அனைத்து நெல் விதை ரகங்களும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கன்னிப்பூ பருவ நெல் ரகங்களை சுத்திகரிப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனை நேற்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே விதை பண்ணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அங்கு நடைபெறும் பணிகள் பற்றி வேளாண்மை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நெல் விதைகளை குடோனுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு நடக்கும் பணிகள் பற்றியும் கேட்டறிந்தார்.
தரமான விதை நெல்
பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் விவசாயிகளின் வசதிக்காக தரமான விதை நெல், அரசு சார்பில் வினியோகம் செய்யப்படுகிறது. தரமான விதைகளை அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி, விதை சான்று அதிகாரிகளால் பரிசோதனை மேற்கொண்டு அங்கீகாரம் வழங்கப்படுகின்றன. விதை சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விதை சுத்திகரிப்பு செய்வதன் மூலம் விதைகளில் கலந்துள்ள உயிரற்ற பொருட்கள், சாதாரண களை விதைகள், நச்சு களை விதைகள், சிதைந்த விதைகள், பிற பயிர்ரக விதைகள் மற்றும் அளவு குறைந்த விதைகள் அகற்றப்படுகின்றன.
விவசாயிகளுக்கு வினியோகம்
பின்னர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட விதை நெல் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்படும். அங்கு அதன் முளைப்பு திறன், புறத்தூய்மை மற்றும் ஈர பதம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தேவையற்ற நெல் விதைகள் நீக்கப்படும். முடிவில் தேர்ச்சியடையும் நெல்விதைகள் சம்பந்தபட்ட விதைச்சான்று அதிகாரி மூலம் சான்று வழங்கப்படும். இவை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
அரசு விதைப்பண்ணையின் மூலம் வழங்கப்படும் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ பயிர் செய்தாலே போதுமானது. தனியார் மூலம் தயார் செய்யப்படும் விதைகளை பயிர் செய்தால் ஏக்கருக்கு 50 கிலோ பயிரிடவேண்டும். விதை பரிசோதனை மூலம் 20 சதவீதம் வரை விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் மற்றும் லாபம் கிடைக்கும். விதை சான்று அளிப்பதன் மூலம் தரமான மற்றும் கலப்படமற்ற நெல் விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) குணபாலன், விதைச்சான்று உதவி இயக்குனர்கள் ஆரோக்கிய அமலஜெயந்த், ஜோஸ், வேளாண்மைதுறை துணை இயக்குனர்கள் முருகேசன், விஜி பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.News