சப்-இன்ஸ்பெக்டர் கொலை: காயல்பட்டினத்தை சேர்ந்த 6 பேருக்கு தொடர்பா? - பயங்கரவாதியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை
Views - 282 Likes - 0 Liked
-
களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக திருவிதாங்கோடு அடப்புவிளை பதார் தெருவை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 29), நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் நகர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில் 2 பேரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் பயங்கரவாதிகள் 2 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் காவலானது வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வரை முடிவடைந்துள்ள விசாரணையின் மூலமாக வில்சனை கொல்ல பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீசார் அப்துல் சமீமையும், தவுபிக்கையும் கொலை சம்பவம் நடைபெற்ற சந்தைரோடு சோதனை சாவடிக்கு அழைத்து சென்று வில்சனை கொலை செய்தது எப்படி? என்று நடித்து காட்ட வைத்தனர். அதை வீடியோ பதிவும் செய்து கொண்டனர்.இந்த நிலையில் வில்சன் கொல்லப்படுவதற்கு முன்னதாக பயங்கரவாதிகளில் ஒருவரான தவுபிக் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சென்று நண்பர்கள் 6 பேரை சந்தித்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. ஆனால் என்ன சதித்திட்டம் தீட்டினார்கள்? என்று தெரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தவுபிக் காயல்பட்டினம் சென்று நண்பர்களை சந்தித்து உள்ளார். மொத்தம் 6 பேரை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். எனவே தவுபிக்கை காயல்பட்டினத்துக்கு அழைத்து சென்றோம். பின்னர் நண்பர்கள் 6 பேரையும் அடையாளம் காட்டும்படி தவுபிக்கிடம் கூறினோம். இதைத் தொடர்ந்து 6 பேரின் வீடுகளையும் அவர் அடையாளம் காட்டினார். மேலும் ஆலோசனை நடத்திய இடத்தையும் தெரிவித்ததாக கூறினார்.காயல்பட்டினத்துக்கு தவுபிக்கை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர். அப்துல் சமீமை நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த பிறகு பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல உதவியவர்களின் விவரங்கள் இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. கொலை சம்பவத்தன்று கேரளாவில் பந்த் நடைபெற்றதால் பஸ்கள் இயக்கப்படவில்லை. அப்படி இருக்க 2 பேரும் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு எப்படி சென்றார்கள்? என்று போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீசார் காவலில் இருக்கும் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை உடல் தகுதி குறித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இரவு பயங்கரவாதிகள் 2 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.News