நாடு முழுவதும் உஷார் நிலை சீனாவில் இருந்து வந்த கேரள மாணவிக்கு ‘கொரோனா’ பாதிப்பு
Views - 316 Likes - 0 Liked
-
சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது.அங்குள்ள கடல் உணவு விற்பனை சந்தையில் விற்கப்பட்ட ஏதோ ஒரு விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவிய இந்த வைரஸ் மற்றவர்களுக்கு தொற்றுநோயாக மிகவும் வேகமாக பரவி வருகிறது.சீனாவில் தினமும் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 170 பேர் பலியாகி உள்ளனர். இந்த பாதிப்புக்கு எதிர்ப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர் களிடம் இருந்து நோய் தொற்றாமல் தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்கிறார்கள். தாக்குதல் பரவுவதை தடுக்க சீன அரசு மிகத்தீவிரமாக போராடி வருகிறது.சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியது. நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவர்களுக்கு வைரஸ் தாக்குதல் உள்ளதா என கண்டறிய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த சோதனையில் இந்தியாவில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிந்தது.சீனாவுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படியும் பொதுமக்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகள் அமைத்து உள்ளன.சமீபத்தில் சீனாவிலிருந்து கேரள மாநிலத்துக்கு திரும்பிய 806 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் வீடு திரும்பினர். சீனாவிலிருந்து திரும்பிய கேரள மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் சமீபத்தில் சீனாவின் உகான் நகரிலிருந்து திரும்பி உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் ஆஸ்பத்திரி தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடைய உடல்நலம் தேறிவருகிறது” என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக் கப்பட்ட முதல்நபர் இவர்தான்.கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், “அந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவாமல் தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதுதொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறைக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிந்ததும் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சீனாவிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது தெரியவந்திருக்கிறது. மத்திய அரசிடம் இருந்தும் இதுபற்றி எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவருக்கு ஆபத்தான அறிகுறிகள் எதுவும் இல்லை. நல்ல உடல்நலத்துடன் உள்ளார். திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சீனாவில் இருந்துவந்த 20 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு புனே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் 10 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை.இந்த மாணவிக்கு மட்டும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் அறிக்கை வரவேண்டியுள்ளது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனிவார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.சீனாவின் ஹுபெய் மாகாணத்திலிருந்து இந்தியர்களை அழைத்துவரும் பணியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்காக ஏர்இந்தியாவின் 2 சிறப்பு விமானங்கள் இன்று சீனா செல்லும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டதும் டெல்லியில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், காய்ச்சல் அறிகுறி இருந்தால் தனிவார்டுகளில் சிகிச்சை அளிக்கவும் மத்திய அரசு தயார்நிலையில் உள்ளது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய 3 பேர் தங்களுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் இருப்பதாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் டெல்லி ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு தனிவார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களது ரத்த மாதிரி புனே ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிந்தது. டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் பலருக்கு இதுபோல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை.இதுவரை 7 விமான நிலையங்களில் நடத்தப்பட்டு வந்த மருத்துவ பரிசோதனை இப்போது 21 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து திரும்பியவர்கள் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எந்த நேரமும் 011-23978046 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.News