பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Views - 345 Likes - 0 Liked
-
எல்.ஐ.சி. பங்குகளில் ஒரு பகுதி தனியாருக்கு விற்கப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தபோது அறிவித்தது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எல்.ஐ.சி.யின் அனைத்து தரப்பு ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இதே போல குமரி மாவட்டத்திலும் எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக நேற்று ஒரு மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டமானது நாகர்கோவில் வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், குழித்துறை மற்றும் தக்கலை ஆகிய 4 இடங்களில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகங்களில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நடந்தது. இதில் முதல்நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் மற்றும் இந்திய காப்பீடு கள தொழிலாளர்கள் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை சேர்ந்த சுமார் 200 ஊழியர்கள் கலந்துகொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஒரு மணி நேர வேலை நிறுத்தத்தின்போது அலுவலங்களை விட்டு வெளியேறிய ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகர்கோவில் பார்வதிபுரம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் ஜாண்ரமேஷ் தலைமை தாங்கினார். வளர்ச்சி அதிகாரிகள் சங்க கோட்ட தலைவர் பீட்டர் இருதயராஜ், சி.ஐ.டி.யு. நிர்வாகி ராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.மார்த்தாண்டம் எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க குழித்துறை கிளை தலைவர் வில்லியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சஜிகுமார் தொடங்கி வைத்தார். செயலாளர் மல்லுசாமி, கோட்ட உறுப்பினர் ஜெயின் பீட்டர் ஆகியோர் விளக்கி பேசினர். இதில் எல்.ஐ.சி. ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.News