" “If opportunity doesn't knock, build a door.”"

கொரோனா வைரஸ் எதிரொலி: கோவில்கள் வெறிச்சோடின

Views - 315     Likes - 0     Liked


  • கொரோனா வைரஸ் காரணமாக, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மேற்கு கோபுர வாசல் மூடப்பட்டு, கிழக்கு ராஜகோபுர வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் குருக்கள், ஓதுவார், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் உள்பட கோவிலுக்கு வரும் அனைவரது கைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மருத்துவ கருவிகள் மூலம் காய்ச்சல் உள்ளதா? என பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலுக் குள் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். கோவில் வாசலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுற்றுப்புறம் சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சோதனை செய்வதை கோவில் இணை கமிஷனர் காவேரி நேற்று தொடங்கி வைத்தார்.

    ரஷியா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளுக்கும் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. வருகிற 29-ந்தேதி பங்குனி திருவிழா தொடங்க இருப்பதால், அதற்கு தேவையான பந்தல்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. பங்குனி திருவிழாவின் போது ஆயிரக்கணக் கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மாநகராட்சி சார்பில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் மற்றும் உண்டியல்கள் போன்றவற்றில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு நேற்று எந்தவித சோதனையும் செய்யப்படவில்லை.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கு வரும் பக்தர்களை தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தனியார் கோவில்களில் பக்தர்களுக்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. காய்ச்சல் உள்ள பக்தர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றனர். தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி தெளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கொரோனா வைரஸ் குறித்து அச்சம் இருந்து வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் கோவில்களுக்கு வரும் பக்தர் களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

    இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைந்து இருந்தது.

    இருப்பினும், கோவில்களில் பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல் நடந்து வருவதாகவும், அன்னதான கூடம் செயல்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    News