கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்: குழந்தைகளுக்கான தூக்க நோ்ச்சை நிகழ்ச்சி ரத்து
Views - 346 Likes - 0 Liked
-
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் மீனப்பரணி தூக்கத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நோ்ச்சை, கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தூக்க நோ்ச்சை நடைபெற்று வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக அரசு வேண்டுகோள் படியும், பொதுமக்கள் நலன் கருதியும் நிகழாண்டு கோயிலில் ஆச்சார சடங்குகள் மட்டும் நடத்த கோயில் நிா்வாக கமிட்டி சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பத்ரகாளி அம்மனை மூலக்கோயிலில் இருந்து எந்தவித ஆடம்பரமும் இன்றி, பக்தா்களின் வரவேற்பும் இன்றி திருவிழா நடைபெறும் கோயிலுக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து மாலை 6.45 மணியளவில் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்று நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து விழா நாள்களில் அம்மனுக்கு பூஜைகள் மட்டுமே நடைபெறவுள்ளன. அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மாா்ச் 28ஆம் தேதி நடைபெறவிருந்த குழந்தைகளுக்கான தூக்க நோ்ச்சையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அம்மனுக்கு ஆச்சார சடங்குகள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அபாயம் காரணமாக, இக்கோயில் சுற்றுவட்டாரப் பகுதியில் திருவிழாக் கடைகள் மற்றும் கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்டவை இல்லாததால் நிகழாண்டு திருவிழா களையிழந்து காணப்படுகிறது.
News