" “If opportunity doesn't knock, build a door.”"

கொரோனா தடுப்பு நடவடிக்கை: கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடிய நாகர்கோவில்

Views - 287     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 
     
    உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் குமரி மாவட்டத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே பள்ளி–கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள் (மால்கள்), சூப்பர் மார்க்கெட்டுகள், விளையாட்டு அரங்கங்கள், டாஸ்மாக் பார்கள், கிளப்புகள், ஓட்டல் பார்கள், மீன் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
     
    இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று நாகர்கோவில் நகரில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள், சிறு, சிறு ஜவுளிக்கடைகள், பேக்கரிகள், செருப்புக்கடைகள், கவரிங் கடைகள் போன்ற பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
     
    இதனால் நகரில் மீனாட்சிபுரம், கோர்ட்டு ரோடு, கோட்டார், செம்மாங்குடி ரோடு உள்ளிட்ட கடைவீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. அடைக்கப்பட்டு இருந்த கடைகள் சிலவற்றின் முன்பகுதியில் மாநகராட்சி அறிவிப்பின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடை அடைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
     
    இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள கடைவீதிகளும் வெறிச்சோடியது.
     
    அதேநேரத்தில் சுகாதார பணியாளர்களின் தூய்மைப்பணிகள் வழக்கம்போல் நடந்தன. நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் பிளீச்சிங் பவுடர் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வலியுறுத்தப்பட்டது. இதற்காக பாலமோர் ரோடு உள்ளிட்ட சில இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு, கை கழுவும் கிருமி நாசினியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    News