ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடத்தில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
Views - 339 Likes - 0 Liked
-
களியக்காவிளை,இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக கடந்த 22-ந்தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தொடர்ச்சியாக மறுநாள் காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஏற்று பொதுமக்கள் ஊரடங்கை கடைபிடித்தனர். இதையடுத்து கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றிய போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் காய்கறி, பால், மருந்து, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அதன் சம்பந்தப்பட்ட கடைகள் மட்டும் திறந்து வைக்க விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார். அந்த உத்தரவு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.ஊரடங்கையொட்டி குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மார்த்தாண்டம் பஸ் நிலையம், மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தடை உத்தரவு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஊரடங்கு உத்தரவை மீறி பொதுஇடங்களில் சுற்றி திரிகிறார்களா? என போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிராமப்புற பகுதிகளிலும் போலீசாரின் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்தது.அப்போது, வில்லுக்குறி-திங்கள்சந்தை சாலையில் மாடத்தட்டுவிளை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வீடுகளுக்கு செல்லுமாறு எச்சரித்து விரட்டினர். இதேபோல், குலசேகரம் சந்திப்பு பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி எச்சரித்தனர். மேலும், இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களில் பொது இடத்தில் சுற்றி திரிந்தவர்களை மடக்கிய போலீசார், கொரோனா வைரசின் தாக்கம் குறித்த தகவலை கூறி வரும் நாட்களில் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.News