நாகர்கோவில் ரெயில் நிலையம் ஹெலிகேமரா மூலம் கண்காணிப்பு - திருட்டை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை
Views - 320 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், ரெயில் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள யார்டில் இரும்பு மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை மர்மநபர்கள் திருடலாம் என நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கருதினர். இதனையடுத்து ரெயில் நிலைய பகுதிகளில் தேவையின்றி மர்ம நபர்கள் சுற்றித்திரிகிறார்களா? என்பதை கண்காணிக்கவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் ஹெலி கேமரா மூலம் கண்காணிக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் முடிவு செய்தனர்.அதன்படி ஹெலிகேமரா மூலம் ரெயில் நிலைய பகுதிகளை கண்காணிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை ரெயில்வே பாதுகாப்பு படை துணை கமிஷனர் சிவதாஸ் தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகேமரா இயக்குவது குறித்து போலீசாருக்கு பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.இதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் ஹெலிகேமராவை இயக்கினார். பின்னர் ரெயில் நிலையம், யார்டு பகுதி மற்றும் ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹெலிகேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் ஹெலிகேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் நேரலையாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது. இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையில் 2 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.News