" “If opportunity doesn't knock, build a door.”"

வெளி மாநிலங்களில் இருந்து குமரிக்கு வந்த 47 பேர்கன்னியாகுமரியில் தங்க வைப்பு

Views - 298     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி, 
     
    வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மற்றும் கார் மூலம் வந்த 47 பேர் கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
     
    பரிசோதனை
     
    தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வசித்து வந்த குமரியை சேர்ந்தவர்கள், தங்கள் ஊருக்கு வாகனங்கள் மூலம் திரும்பிய வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருபவர்களை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி, அருகில் உள்ள மையத்தில் சளி, ரத்தம் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்
    இவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
     
    36 பேர் தங்க வைப்பு
     
    இந்த நிலையில் டெல்லியில் இருந்து சிறப்பு ரெயில் திருவனந்தபுரத்துக்கு வந்தது. அந்த ரெயிலில் மராட்டியம், கர்நாடகம் உள்பட வெளி மாநிலங்களில் வேலை செய்து வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் தனி பஸ்களில் கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டனர். அதன்படி 2 பஸ்கள் மூலம் 34 பேர் கன்னியாகுமரிக்கு வந்தனர். இவர்களில் 18 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள், 4 பேர் சிறுமிகள், 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள். அவர்கள் கன்னியாகுமரி அருகே உள்ள கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்-மாணவிகள் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
     
    இந்த நிலையில் சிறப்பு ரெயிலில் குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியை சேர்ந்த தம்பதியும் வந்தனர். அவர்கள் பஸ்சில் ஏறாமல் தனியாக வாடகை காரை அமர்த்தி, தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது தான் அவர்கள் சிறப்பு ரெயில் மூலம் வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களும் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தம்பதியையும் சேர்த்து 36 பேர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தனர்.
     
    விடுதிக்கு மாற்றம்
     
    அங்கு அவர்களுக்கு போதிய வசதி இல்லை என்று கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், பயிற்சி துணை கலெக்டர் பிர்தவ்ஸ் பாத்திமா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான், கன்னியாகுமரி வருவாய் அதிகாரி செய்யது இப்ராகிம் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி விடுதிகளில் இருந்து பஸ் மூலம் கன்னியாகுமரிக்கு அழைத்து சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து 36 பேருக்கும் சளி மற்றும் ரத்த மாதிரி ஆகியவை சேகரிக்கப்பட்டு, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
     
    இந்த நிலையில் மராட்டியத்தில் இருந்து 2 கார்களில் 11 பேர் குமரி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்களில் 5 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் ஆவார்கள். அவர்களை ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே போலீசார் தடுத்தனர். பின்னர் 11 பேருக்கும் சளி மற்றும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 11 பேரும் கன்னியாகுமரியில் உள்ள இன்னொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 47 பேர் கன்னியாகுமரி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
    News