" “If opportunity doesn't knock, build a door.”"

குமரியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 888 பேருடன் 2 ரெயில்கள் புறப்பட்டனசொந்த ஊருக்கு செல்லும் உற்சாகத்துடன் பயணம்

Views - 286     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி, 
     
    குமரியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 888 பேருடன் 2 ரெயில்கள் புறப்பட்டன. அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
     
    வெளிமாநில தொழிலாளர்கள்
     
    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து பணிபுரிந்தனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் தவித்தனர்
    அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்த 17-ந் தேதி முதல் கட்டமாக 957 பேர் நாகர்கோவிலில் இருந்து பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
     
    ஜெய்ப்பூருக்கு தனி ரெயில்
     
    இந்தநிலையில் 2-வது கட்டமாக குமரி மாவட்டத்தை அடுத்துள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ராஜஸ்தானை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களையும் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
     
    அதன்படி நேற்று கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு தனி ரெயில் விடப்பட்டது. 24 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் காலையில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.
     
    334 தொழிலாளர்கள்
     
    குமரி மாவட்டத்தை சேர்ந்த 145 பேர், நெல்லையில் இருந்து 81 பேர், தென்காசியில் இருந்து 68 பேர், தூத்துக்குடியில் இருந்து 36 பேர், விருதுநகரில் இருந்து 4 பேர் என மொத்தம் 334 பேர் போலீஸ் பாதுகாப்புடன் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அரசு பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
     
    அவர்களுக்கு ரெயில் நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பணியில் அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ ஆய்வாளர் டாக்டர் சக்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அஜய்குமார், செல்வரங்கன், தாபான்ஸ், ரெயில்வே சுகாதார ஆய்வாளர் ஆல்வின் ஆகியோர் ஈடுபட்டனர்.
     
    பின்னர், வடமாநில தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு கைகளை கழுவி சுத்தம் செய்த பின் ரெயில் பெட்டிகளில் ஏறினார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் 334 தொழிலாளர்களுக்கும் பிரட், தண்ணீர் பாட்டில், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. மதியம் 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இந்த ரெயில் ஜெய்ப்பூர் நோக்கி புறப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கொடியசைத்து ரெயிலை வழி அனுப்பி வைத்தார். அப்போது, வடமாநில தொழிலாளர்கள் உற்சாகத்துடன் கையசைத்தபடி சென்றனர்.
     
    பலத்த போலீஸ் பாதுகாப்பு
     
    இந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் நெல்லை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு சுதிர்லால், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி ரெயில் நிலைய அதிகாரி ராஜேந்திர பிரசாத் மீனா, கன்னியாகுமரி வருவாய் அதிகாரி செய்யது இப்ராகிம், நகர அ.தி.மு.க. செயலாளர் வின்ஸ்டன், ரையான்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
     
    இந்த ரெயில் நெல்லை, திருச்சி, சேலம், ஜோலார்பேட்டை, பர்மாவரம், வாடி, புனே, வதோதரா, அலகாபாத், அகமதாபாத், பாலான்பூர், மார்வார், ஜோத்பூர் வழியாக 24-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடைகிறது. முன்னதாக இந்த ரெயிலில் ஏறுவதற்காக தென்காசியில் இருந்து வந்த 13 பேர் செல்லவில்லை. ஏனெனில் அதில் ஒரு பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென கர்ப்பம் கலைந்ததால் இந்த பயணத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் தென்காசிக்கு சென்றனர்.
     
    நாகர்கோவிலில்...
     
    மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் 554 பேர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் புறப்பட்டுச் சென்றனர். தனி ரெயிலை பிற்பகல் 3.40 மணிக்கு உதவி கலெக்டர் (பத்மநாபபுரம்) சரண்யா அரி ரெயிலை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது வடமாநில தொழிலாளர்கள் கையசைத்து மகிழ்ச்சி பொங்க புறப்பட்டுச் சென்றனர்.
     
    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, தாசில்தார்கள் வினோத்(புலம்பெயர் தொழிலாளர்கள்), அப்துல்லா மன்னான் (அகஸ்தீஸ்வரம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
     
    இந்த ரெயிலில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 900 பேர் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து ஏறுகிறார்கள். அதன்பிறகு இந்த ரெயில் வேறு எங்கும் நிற்காது.
     
    காங்கிரஸ் உதவி
     
    ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சியின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய தலைவர் ராபர்ட் புரூஸ் தலைமையில் நிர்வாகிகள் வைகுண்டதாஸ், திருத்துவதாஸ், ஜெகன், செல்வராஜ் உள்ளிட்டோர் தலா 2 பிரட் பாக்கெட்டுகள், 2 பிஸ்கட் பாக்கெட்டுகள், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரெயில் நிலைய வளாகங்களில் வைத்து வழங்கினர். ராஜஸ்தான் மாநிலத்துக்கு புறப்பட்டுச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியின் உதவி மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் என்று ராபர்ட் புரூஸ் கூறினார்
    News