" “If opportunity doesn't knock, build a door.”"

குமரி மாவட்டத்தில்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டனவடசேரி மீன்சந்தையும் செயல்பட்டது

Views - 297     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 
     
    குமரி மாவட்டத்தில் பெரிய நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. வடசேரி மீன்சந்தையும் செயல் பட்டது.
     
    ஊரடங்கில் தளர்வு
     
    தமிழகத்தில் 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசு கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்துள்ளது
    அதில் குறிப்பாக ஜுன் மாதம் 1-ந் தேதி (நேற்று) முதல் தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் தவிர்த்து பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதி போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
     
    பெரிய நகைக்கடைகள் திறப்பு
     
    குமரி மாவட்டத்தில் பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மூடியே கிடந்தன. அரசு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் கே.பி.ரோடு, கோர்ட்டுரோடு, கேப் ரோடு, மீனாட்சிபுரம், வேப்பமூடு, செட்டிகுளம் சந்திப்பு, வடசேரி, வெட்டூர்ணிமடம், மணிமேடை சந்திப்பு பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் போன்றவை திறக்கப்பட்டன.
     
    இதேபோல் நாகர்கோவில் வடசேரி மீன் சந்தையும் நேற்று திறக்கப்பட்டது. அங்கு மீன் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஒவ்வொரு கடை முன்பும் வட்டம் வரையப்பட்டு இருந்தது. மீன் வியாபாரிகளும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் மீன் விற்பனை செய்தனர்.
     
    மீன்கள் விற்பனை
     
    இதேபோல் குமரி மாவட்டம் முழுவதும் அதாவது மார்த்தாண்டம், குழித்துறை, குளச்சல், தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஷோரூம்கள் ஆகியவை திறக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளுக்கு மக்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து சென்றதையும் காண முடிந்தது.
     
    நாகர்கோவிலில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மீன்வாங்கவும், வியாபாரிகள் பாதுகாப்பான முறையில் மீன்களை விற்பனை செய்ய முன்வந்தால் நகரின் பிறபகுதிகளில் உள்ள மீன் சந்தைகளை திறந்து விற்பனை செய்யலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    News