" “If opportunity doesn't knock, build a door.”"

குமரியில் கொட்டி தீர்த்த மழை:நாகர்கோவிலில் 20 மி.மீ. பதிவு

Views - 315     Likes - 0     Liked


  • குமரி மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று மட்டும் 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
     
    நாகர்கோவிலில் மழை
     
    கேரளா மற்றும் அதன் எல்லையை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
    நாகர்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்ததுடன், நேற்றும் கொட்டி தீர்த்தது. மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சில குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் கோட்டார், வடசேரி, ஒழுகினசேரி, பார்வதிபுரம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செட்டிகுளம் சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது பெரும் அவதிக்குள்ளானார்கள்.
     
    20.2 மி.மீ. பதிவு
     
    நேற்று மட்டும் நாகர்கோவிலில் 20.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
     
    இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோதையார், தாமிரபரணி போன்ற ஆறுகளிலும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     
    மழை அளவு
     
    நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை விவரம் மி.மீ. வருமாறு:-
     
    பூதப்பாண்டி-4.2, சிற்றார் 1- 15.8, களியல்- 4.6, கன்னிமார்- 3.2, கொட்டாரம்- 8.2, குழித்துறை- 13.2, மயிலாடி- 18.2, நாகர்கோவில்- 17.8, பேச்சிப்பாறை- 7, பெருஞ்சாணி- 16.8, தக்கலை- 6, சுருளோடு- 15.4, சிற்றார் 2- 20.2, இரணியல்- 8, குளச்சல்- 10.6, பாலமோர்- 21.2, மாம்பழத்துறையாறு- 16, முகிலன்விளை- 18, குருந்தன்கோடு- 10, முக்கடல் அணை- 5.8 என பதிவாகி உள்ளது.
     
    பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 573 கனஅடி தண்ணீர் வருகிறது. 37.50 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் 37.90 அடியாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணைக்கு 519 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 44.75 அடியில் இருந்து 45.85 அடியாக உயர்ந்தது.
     
    இதேபோல் சிற்றார்-1 அணைக்கு 151 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 13.51 அடியில் இருந்து 13.97 அடியானது. சிற்றார்-2 அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்ததால், 13.61 அடியில் இருந்து 14.07 அடியாக உயர்ந்தது. இதனால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது
    News