10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து:மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு
Views - 296 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.முதல்-அமைச்சருக்கு நன்றி10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறுநாகர்கோவில் மறவன்குடியிருப்பு 10-ம் வகுப்பு மாணவி ஆன்ஸ் ரித்திகா:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் உள்ளது. ஒரு வருட கடின உழைப்பு வீணாகி விட்டது. இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியான முடிவு. ஏனென்றால் தேர்வு எழுதும்போது ஒரே இடத்தில் மாணவர்கள் கூடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த முடிவை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி சுரபி:- தேர்வு ரத்து என்பது அரசின் நல்ல முடிவை காட்டுகிறது. கொரோனா பரவி வரும் தற்போதைய நிலையில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். தேர்வு நடத்தப்பட்டு இருந்தால் கொஞ்சம் அதிகமாக மதிப்பெண்கள் கிடைத்திருக்கும். இருப்பினும் அரசு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையிலும், வருகை பதிவேடு அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டிருப்பதால் என்னை போன்ற மாணவர்களுக்கு ஓரளவு மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.கவலை அளிக்கிறதுநாகர்கோவில் கோர்ட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியின் தந்தை ஸ்ரீகாந்த்:- 10-ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும், மதிப்பெண் என்று வரும்போது சற்று கவலை அளிக்கிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது மாணவர்கள் மத்தியில் மன உளைச்சலை தரும். தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இது மகிழ்ச்சிதான். படிப்பிலும், வகுப்பிலும் சிறந்த மாணவர்களாக வரவேண்டும் என்று படித்த மாணவர்களுக்கு ஒரு வருட படிப்பு வீணாகிவிட்டது. பிற்காலத்தில் வேலைவாய்ப்புக்கும், பிளஸ்-1 வகுப்பில் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கும் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே தேர்வு நடத்தாதது கவலை அளிக்கத்தான் செய்கிறது.வரவேற்புநாகர்கோவில் கணியாகுளம் பாறையடி பகுதியைச் சேர்ந்த ஜோதி:- எனது 2 மகன்கள் 10-ம் வகுப்பு படித்து தேர்வுக்கு தயாராகி வந்தனர். தேர்வு ரத்து செய்யப்பட்டது படிக்காத பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் குறைவாக மதிப்பெண் பெற்றிருப்பார்கள். அதனால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கஷ்டப்பட்டு படித்திருப்பார்கள். எனவே தேர்வை நடத்தி இருந்தால் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருக்கலாமே என்று அவர்களுக்கு எண்ணத் தோன்றும். அதேநேரத்தில் அரசு கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பது சரியானதுதான். இதை நான் வரவேற்கிறேன். மாணவர்களுக்கு இது பாதுகாப்பை அளிப்பதாக உள்ளது. ஒருபுறம் மதிப்பெண் குறையுமே என்ற கவலை இருந்தாலும், மற்றொருபுறம் பாதிப்பை பார்த்தால் அரசின் இந்த முடிவு மகிழ்ச்சியை தருகிறது.ஆசிரியர்கள்நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வேலவன்:- ஊரடங்கு காலத்தில் கொரோனா பற்றிய பயமும், தேர்வு எப்படி எழுத போகிறோமோ என்ற குழப்பமும் மாணவர்கள் இடையே இருந்தது. மேலும் 2 மாதத்துக்கும் மேலாக பயிற்சி இல்லாததால் தேர்வை எதிர்கொள்ள சிரமமான நிலையில் இருந்தனர். கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக ஒரு நெறிமுறையையும் அரசு வகுத்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் 80 விழுக்காடும், மாணவர்களுடைய வருகைக்காக 20 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவுறுத்தி இருப்பது நல்ல முயற்சி ஆகும். இந்த அறிவிப்பால் மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திட்டுவிளை அரசு பள்ளி ஆசிரியை நூர்ஜகான்:- தற்போதுள்ள சூழ்நிலையில் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என்று மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்தில் இருந்தனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்கு மனதளவில் தயாராகாமல் இருந்தனர். இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வுகளை ரத்து செய்ததின் மூலம் தமிழக அரசு மக்கள் நலனில் காட்டும் அக்கறையை உணர்ந்து கொள்ள முடிகிறதுNews