குமரியில் தொற்று பாதிப்பு 200-ஐ நெருங்குகிறது: மதுரையில் இருந்து நாகர்கோவில் வந்த நகை வியாபாரிகளுக்கு கொரோனா - அவர்கள் சென்ற இடங்கள் ‘சீல்’ வைப்பு
Views - 313 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,சென்னை உள்பட வெளி மாவட்டம், வெளி மாநில பகுதிகளில் இருந்து குமரிக்கு வருபவர்களால் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில், குமரி மாவட்டத்தின் உள் பகுதியில் பத்துகாணி, தூத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.சுகாதாரத்துறையினரும் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட இடமாக அறிவித்து, மேற்கொண்டு அங்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் மேலும் 7 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் வந்திறங்கியவர்களில் கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மார்த்தாண்டம் காஞ்சிரோடு பகுதியைச் சேர்ந்த 37 வயது ஆண், 44 வயது ஆண், வல்லன்குமாரன்விளையைச் சேர்ந்த 52 வயது ஆண், கல்லன்குழி புளித்தோப்புவிளையைச் சேர்ந்த 22 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டது. மேலும், வெளி மாவட்டத்தில் இருந்து வந்த ஆற்றூர் செந்தாரவிளையைச் சேர்ந்த 55 வயது பெண் மற்றும் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் வசித்து வரும் 63 வயது முதியவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதேபோல் வெளி மாவட்டத்தில் இருந்து காரில் வந்த நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த 38 வயது தொழிலதிபருக்கும் தொற்று ஏற்பட்டது.தொற்று ஏற்பட்டவர்களில் மார்த்தாண்டம் காஞ்சிரோடு பகுதியை சேர்ந்த 2 பேர் நகை வியாபாரிகள். மதுரையில் இருந்து ரெயிலில் வந்தவர்கள் ஆவர். இவர்கள் நாகர்கோவிலில் பல இடங்களில் சுற்றி திரிந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் சென்ற இடங்களை சுகாதாரத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகர்நல அதிகாரி கின்ஷால் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை மற்றும் சுகாதார ஊழியர்கள் நேற்று மீனாட்சிபுரத்தில் அவர்கள் சென்ற இடங்களில் கிருமி நாசினி தெளித்து ‘சீல்‘ வைத்தனர்.இதேபோல் புதுக்குடியிருப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் வசிக்கும் 63 வயது முதியவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது? என்ற விவரம் தெரிய வில்லை. இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதும் உறவினரான முன்சிறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பல் டாக்டர் ஒருவரை அழைத்துக் கொண்டு வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் உள்ள 75 வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முதியவர் வசித்து வந்த வீடும், அதற்கு அருகாமையில் உள்ள வீடுகளும் பூட்டப்பட்டன. முதியவரின் வீட்டில் உள்ள 6 பேரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி உள்ளனர். முதியவருடன் சென்ற பல் டாக்டரும் அன்றைய தினம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை. இருப்பினும் முதியவருடன் தொடர்பில் இருந்ததால் அவரையும் தனிமைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அந்த குடியிருப்புவாசிகள் தங்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சம் கலந்த பீதியுடன் உள்ளனர்.முன்னதாக நேற்றுமுன்தினம் இரவு 8 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. அதன்படி குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்தது. இதனால் குமரியில் தொற்று பாதிப்பு 200-ஐ நெருங்குகிறதுNews