" “If opportunity doesn't knock, build a door.”"

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ‘எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் மாணவர்கள் தேர்ச்சி தான்’ – அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

Views - 311     Likes - 0     Liked


  • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது.

    இதற்காக பள்ளிகளில் இருந்து ஏற்கனவே மாணவர்களின் வருகைப்பதிவேடுகளை கல்வித்துறை பெற்று பாதுகாப்பாக வைத்துள்ளது. அதேபோல், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேடுகள், விடைத்தாள்கள், மாணவர் முன்னேற்ற அறிக்கை ஆகியவற்றை ஒப்படைக்க தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதற்கான பணிகளில் அனைத்து பள்ளிகளும் ஈடுபட்டு வருகிறது.

    இந்தநிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பலர் குறைவான மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்து இருப்பதால், அதனை எப்படி கணக்கிட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது என்பதை அரசு தெளிவுப்படுத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

    அதனை ஏற்று, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (முழு கூடுதல் பொறுப்பு) மு.பழனிச்சாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தேர்வுகள் ரத்துசெய்யப்பட்ட காரணத்தினால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 வகுப்பு விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர். மாணவர்களுடைய மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இந்த விவரத்தினை அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    News