" “If opportunity doesn't knock, build a door.”"

கூட்டுறவு நிறுவனங்களில் விற்கப்படும்19 வகை மளிகைப் பொருட்கள் தரமானவை – தமிழக அரசு விளக்கம்

Views - 321     Likes - 0     Liked


  • கொரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரேஷன் கடைகள் மூலம் 98.6 சதவீத அரிசி அட்டைதாரருக்கும் ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

    அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. முன்னுரிமையற்ற அரிசி அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருக்கும் தலா 5 கிலோ அரிசி இந்த 3 மாதங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    மார்ச் 29-ந் தேதி முதல் கூடுதலாக நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் தற்போது வரை செயல்பட்டு வரும் 188 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக கடந்த 17-ந் தேதிவரை 4,593 டன் காய்கறிகள் ரூ.12.13 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன.

    பொதுமக்களுக்கு தேவையான 19 வகை மளிகைப் பொருட்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுக்கொள்முதல் குழுக்கள் மூலம் தரமாக கொள்முதல் செய்யப்பட்டு அவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    வெளிச்சந்தையில் ரூ.597 மதிப்புள்ள பொருட்கள், அங்கு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு தனியார் கடைகளும் விற்பனை செய்ய தொடங்கினாலும், ரூ.500-மதிப்பிலான 19 மளிகைப் பொருட்கள் 10 லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தரத்துக்கு சான்று

    கடந்த 2 மாதங்களில், 17-ந் தேதிவரை 6 லட்சத்து 91 ஆயிரத்து 184 மளிகைத் தொகுப்புகள் ரூ.34.61 கோடி மற்றும் சில்லரை விற்பனையின் மூலம் ரூ.3.16 கோடி என மொத்தம் ரூ.37.77 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    தரமான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் தான் பொதுமக்கள் இதுவரை ரூ.37.70 கோடி மதிப்புள்ள மளிகை பொருட்களைப் பெற்று உள்ளனர். அனைத்து தனியார் கடைகளும் திறக்கப்பட்ட போதிலும் மளிகைத் தொகுப்புகள் தொடர்ந்து விற்பனையாகி வருவதே அதன் தரத்திற்கு சான்றாகும்.

    தவறான கருத்து

    விற்காத பொருட்களை விற்பனையாளர்களை பெற்று செல்ல அலுவலர்களே நிர்பந்திக்கிறார்கள் என்பது தவறு. இம்மளிகைப்பொருள்களைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தற்போது சென்னை மற்றும் 3 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு 30-ந் தேதிவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அரிசி பெறும் 21.83 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.218 கோடியே 35 லட்சம் மதிப்பில் தலா ரூ.1,000 அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    பணியாளர்களுக்கு சலுகை

    இப்பணியில் ஈடுபடும் ரேசன் கடைப் பணியாளர்களுக்கு, ஒருமுறை ஊக்கத் தொகையாக விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம் கட்டுநர்களுக்கு ரூ.2 ஆயிரமும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தினால் போக்குவரத்து வசதி இல்லாத நேரங்களில் பொது விநியோகத்திட்ட பணியாளர்களுக்கு தினசரி போக்குவரத்து செலவாக ரூ.200 அனுமதிக்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ரேசன் கடைப் பணியாளர்களுக்கு சம்பள விகித மாற்றம் செய்து உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ரேசன் கடைப் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    பணியின்போது தொற்றின் காரணமாக பாதிக்கப்படும் பொதுவிநியோகத்திட்ட பணியாளர்களுக்கு அரசின் நிதியுதவிகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    News