சாத்தான்குளம் வழக்கில் கைதான முத்துராஜுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவல்
Views - 284 Likes - 0 Liked
-
தூத்துக்குடி,
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் போலீஸ்காரர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடிவந்தனர். முத்துராஜை தேடப்படும் நபராக அறிவித்து சிபிசிஐடி தேடி வந்தது. இந்த சூழலில், நேற்று இரவு விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் என்ற பகுதியில் முத்துராஜ் கைது செய்யப்பட்டார்.இரவு முழுவதும் சிபிசிஐடி கட்டுப்பாட்டில் இருந்த முத்துராஜ் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, முத்துராஜை வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்News