" “If opportunity doesn't knock, build a door.”"

குமரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

Views - 308     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 
     
    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் நகரப் பகுதியில் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து மழை விட்டு, விட்டு பெய்தது. அதே சமயம் அணைப்பகுதி மற்றும் மலையோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது
    இந்த மழை நேற்று காலையிலும் தொடர்ந்தது. இதனால் பழையாறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. பழையாற்றின் குறுக்கே நாகர்கோவில் அருகே உள்ள குமரி அணை, சபரி அணை, சோழந்திட்டை அணை போன்றவற்றில் வெள்ளம் மறுகால் பாய்ந்தோடுகிறது.
     
    குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வெட்டுமணிக்கும், குழித்துறை தபால்நிலைய சந்திப்புக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையின் மேல் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இதனால், தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் செல்ல முடியாதபடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
     
    குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மேலும் தண்ணீர் வந்தால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
     
    அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 977 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 2271 கன அடியும், 780 கன அடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 2257 கன அடிதண்ணீர் வருகிறது. சிற்றார்-1 அணைக்கு 141 கன அடியும், சிற்றார் -2 அணைக்கு 87 கன அடி தண்ணீரும் வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 427 கன அடி தண்ணீரும், சிற்றார் -1 அணையில் இருந்து 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
     
    நேற்று முன்தினம் 50.85 அடியாக இருந்த பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3¾ அடி உயர்ந்து 54.60 அடியானது. இதே போல் 29.75 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 1¾ அடி உயர்ந்து 31.60 அடியானது. இதே போல் மற்ற அணைகளின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
     
    ‘குமரியின் குற்றாலம்‘ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
     
    திற்பரப்பு அருவியில் யாரும் நுழையாதபடி 3 பேர் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
     
    நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ) வருமாறு:-
     
    பேச்சிப்பாறை -48, பெருஞ்சாணி -55.6, சிற்றார் 1 -51.2, சிற்றார் 2 -76, புத்தன் அணை -55, மாம்பழத்துறையாறு -42, முக்கடல் -30.6, பூதப்பாண்டி -39.2, களியல் -17.6, கன்னிமார் -44.2, கொட்டாரம் -23.4, குழித்துறை -28.3, மயிலாடி -25.2, நாகர்கோவில் -25.8, சுருளக்கோடு -67.4, தக்கலை -42, குளச்சல் -16, இரணியல் -12.4, ஆரல்வாய்மொழி -17, கோழிப்போர்விளை -48, அடையாமடை -39, குருந்தங்கோடு -25.8, முள்ளங்கினாவிளை -52, ஆனைக்கிடங்கு -43.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
     
    இதில் அதிகபட்சமாக சிற்றார்-2 அணை பகுதியில் 76 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
     
    மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சேதம் அடைந்தன. விளவங்கோடு தாலுகா பகுதியில் ஒரு வீடு முழுமையாகவும், 2 வீடுகள் பகுதியாகவும் இடிந்து விழுந்துள்ளதாகவும், கிள்ளியூர் தாலுகாவில் 2 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதாகவும், ஒரு மின் கம்பம் சேதம் அடைந்திருப்பதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
    நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் பழைய வீடு ஒன்று உள்ளது. நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பெய்த மழையால், அந்த தோட்டத்து வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடைந்து இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாகஅப்போது அங்கு யாரும் இல்லை. இதேபோல் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த மணி என்பவரது வீடும் லேசான சேதம் அடைந்தது
    News