" “If opportunity doesn't knock, build a door.”"

ஆந்திராவில் ஓட்டலில் இயங்கி வந்த சிகிச்சை மையத்தில் பயங்கர தீ விபத்து: 10 கொரோனா நோயாளிகள் கருகி சாவு

Views - 305     Likes - 0     Liked


  • விஜயவாடா, 
     
    ஆந்திராவின் விஜய வாடா நகரில் ஸ்வர்ணா பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது.
     
    இந்த ஓட்டலை தனியார் ஆஸ்பத்திரி ஒன்று குத்தகைக்கு எடுத்து, அங்கு கொரோனா சிகிச்சை மையத்தை நடத்தி வந்தது. இந்த மையத்தில் சுமார் 40 கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்
    அவர்களை கவனிப்பதற்காக 10 ஊழியர்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் பணிக்கு அமர்த்தி இருந்தது.
     
    இந்த ஓட்டலில் நேற்றுஅதிகாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலின் தரைத்தளத்தில் பிடித்த தீ சிறிதுநேரத்தில் மளமளவென முதல் மற்றும் 2-ம் தளங்களுக்கும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகளும், ஓட்டலில் தங்கியிருந்தவர்களும் தப்பிப்பதற்காக முயன்றனர்.
     
    இதற்காக அவர்கள் ஓட்டலின் படிக்கட்டுகள் வழியாக பதற்றத்துடன் கீழே இறங்கினர். ஆனால் தீ கீழிருந்து மேல் நோக்கி பரவி வந்ததால், அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அந்த தீயில் சிக்கிக்கொண்டனர்.
     
    உயிர் தப்புவதற்காக சிலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
     
    இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அவர்கள் ஏணி மூலம் சென்று, நோய்த்தொற்று பற்றி கவலைப்படாமல் கொரோனா நோயாளிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
     
    தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
     
    எனினும் இந்த கோர விபத்தில் கொரோனா நோயாளிகள் 10 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், உடல் கருகியும் பலி ஆனார்கள். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவார்கள். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
     
    விஜயவாடாவில் அதிகாலையில் நிகழ்ந்த இந்த தீ விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
     
    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த அவர், இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.
     
    ஓட்டலின் தரை தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் ஓட்டலில் தீ தடுப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
     
    துணை முதல்-மந்திரி (சுகாதாரம்) ஏ.கே.கே.சீனிவாஸ், உள்துறை மந்திரி எம்.சுசரிதா ஆகியோர் தீ விபத்து நடந்த ஓட்டலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.
     
    இதற்கிடையே விஜயவாடா கொரோனா சிகிச்சை மையத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டு அறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
     
    இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் விஜயவாடா தீ விபத்து குறித்து அதிர்ச்சியும், பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கலும் தெரிவித்து உள்ளனர்.
     
    குஜராத்தின் ஆமதாபாத்தில் இயங்கி வந்த கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஆந்திராவில் அதுபோன்ற மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
    News