தமிழகம் – கேரள எல்லைப் பகுதியான செறுவாறக்கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை கேரள போலீஸாா் அகற்ற வேண்டும் என கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக – கேரள எல்லையையொட்டி தளச்சான்விளை, கடுவாக்குழி, செங்கவிளை, ஊரம்பு, கொல்லங்கோடு ஆகிய தமிழக பகுதிகளை களியக்காவிளை – கொல்லங்கோடு சாலை இணைக்கிறது. இச்சாலை தமிழக- கேரள எல்லை பகுதியையொட்டி செல்கிறது. இதில் குளப்புறம் பகுதியை ஒட்டிய செறுவாறக்கோணம் பகுதியில் கேரள போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை களியக்காவிளை மற்றும் கேரளத்துக்கு செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல், பொதுமக்கள் பணிக்கு செல்ல முடியாமலும், அன்றாடப் பணிகள், அவசரத் தேவைகளுக்கு கேரளம் மற்றும் களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
ஆனால் கேரள மாநில பதிவுள்ள வாகனங்கள் தடையில்லாமல் அனுமதிக்கப்படுகிறது. கேரள காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. எனவே, தமிழக-கேரள எல்லையில் வசிக்கும் மக்கள் நலன் கருதி அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேரள மாநில சோதனைச் சாவடியில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கேரள காவல்துறை அமைத்துள்ள தடுப்புகளை அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்