" “If opportunity doesn't knock, build a door.”"

முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்; சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறினால் ரூ.500 செலுத்த வேண்டும் - கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அவசர சட்டம்

Views - 281     Likes - 0     Liked


  • தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனாபரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பிறப்பித்து உள்ளார்.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தமிழக கவர்னர் சில விதிகளை உருவாக்கி உள்ளார். அதன்படி, ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளிக்கான நடவடிக்கை போன்றவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை இசைந்து தீர்க்கக்கூடிய (காம்பவுண்டபிள்) குற்றமாக கருதப்படுகிறது. அதற்கான தண்டனைகளும் இந்த உத்தரவு மூலம் அறிவிக்கப்படுகிறது.

    இந்த விதிகளின்படி, நேரத்துக்கு நேரம் அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி தனிமைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் வாயையும், மூக்கையும் சேர்த்து மூடி முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500 அபராதமும், பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

    சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள், பொது இடங்களில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் மற்றும் அவற்றை பின்பற்றாத வாகனம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த உத்தரவு 4-ந் தேதி (நேற்று) அரசிதழில் வெளியிடப்பட்டு இருப்பதால், இந்த அபராத நடவடிக்கைகள் அமலுக்கு வந்துவிட்டன. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா பரவலை தடுப்பதற்காக சமூக இடைவெளி, ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக கவசம் அணிவது, ஒவ்வொருவரும் இடைவெளி விட்டு தள்ளி நிற்பது, அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவது, தனிமைப்படுத்து தலை முறையாக பின்பற்றுவது போன்றவை கொரோனா தடுப்புக்கு மிகவும் அவசியம் என்பதை பொது சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    தொற்று தொடர்பாக எவ்வளவோ தகவல்களை சொல்லியும், கற்றுக்கொடுத்தும், பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் சில பேர் மற்றும் நிறுவனங்கள், கடைகள் அதை பின்பற்றுவதில்லை. அதன் மூலம் அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, மற்றவர்களுக்கும் அதை பரப்பும் நிலையில் உள்ளனர்.

    எனவே ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளிக்கான நடவடிக்கை போன்றவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை இசைந்து தீர்க்கக்கூடிய (காம்பவுண்டபிள்) குற்றமாக கருத வேண்டியதாகிறது. அதோடு, தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவோருக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவது அவசியமாகிறது.

    அதற்கேற்ற வகையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ல் தேவையான திருத்தங்களைச் செய்ய அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள கருத்துருவை ஏற்று, கவர்னர் பன்வாரிலால் புரோகித், அந்த சட்டத்தை திருத்தி, அவசரச் சட்டத்தை பிறப்பித்து உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

    News