குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று காலை முதலே மழை பெய்த நிலையில், கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும் இருந்தது. ஆரோக்கியபுரம், முட்டம், மணக்குடி, மேல மணக்குடி உள்பட 10 மீனவ கிராங்களில் ஆக்ரோஷ அலை கடற்கரையை நோக்கி சீறி பாய்ந்தபடி இருந்தது.
அலைகள் 10 அடி உயரத்துக்கும் மேல் எழுந்து ஆக்ரோஷமாக கரையில் மோதியது. மேலும் சூறைக்காற்றும் வீசியது. கடல் சீற்றம், சூறைக்காற்று காரணமாக வள்ளம் மற்றும் கட்டுமர படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எனினும் ஒரு சில மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் உடனடியாக கரை திரும்பி விட்டனர். இதனால் அவர்களுக்கு பெரிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க கடல் சீற்றம் காரணமாக கோவளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தூண்டில் வளைவு மெல்ல மெல்ல சேதம் அடைந்து வருகிறது. ஏற்கனவே தூண்டில் வளைவில் போடப்பட்டு இருந்த ஏராளமான கற்கள் ராட்சத அலையால் கடலில் விழுந்துவிட்டன.
இந்த நிலையில் தூண்டில் வளைவு மேலும் சேதம் அடைவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சேதம் அடைந்த தூண்டில் வளைவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.