தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் திரண்ட வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள்-புராதன சின்னங்களை திறக்க கோரிக்கை
Views - 306 Likes - 0 Liked
-
மாமல்லபுரம்,தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திரண்டனர். புராதன சின்னங்களை திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீடிக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறக்கப்படாமல் உள்ளன. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்கள் பலர் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களுக்கு வர தொடங்கி உள்ளனர்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாமல்லபுரத்துக்கு வருகை தந்தனர். கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் உள்ள பகுதிக்கு சென்றனர். அங்கு பார்வையாளர் கட்டண மையம் மூடப்பட்டு புராதன சின்னங்கள் திறக்கப்படாமல் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு உள்ளதை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.பின்னர் அவர்கள் திறந்த வெளியில் உள்ள அர்ச்சுணன் தபசு, கிருஷ்ண மண்டபம், திருமூர்த்தி மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து சென்றனர். மழை தூறலையும் பொருட்படுத்தாமல் பலர் சிற்பங்கள் முன்பு நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் நேற்று ஆன் லைன் வகுப்புகள் இல்லாததால் மாணவர்கள் பலரும் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். இ-பாஸ் தளர்வு காரணமாக அதிகமானோர் கார், இரு சக்கர வாகனங்களில் மாமல்லபுரம் வந்திருந்ததை காண முடிந்தது.இது குறித்து சுற்றுலா பயணிகள் சிலர் கூறும்போது:-கடந்த சில மாதங்களாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த நாங்கள் ஆர்வத்துடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தோம்.முக்கியமான புராதன சின்னங்கள் திறக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்ததாகவும், சாலை ஓரத்தில் பார்வையாளர் கட்டணம் இல்லாத அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட ஒரு சில புராதன சின்னங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அரசு உடனடியாக கடற்கரை கோவில் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதேபோல் தங்கள் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசும், தொல்லியல் துறை நிர்வாகமும் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை திறப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வியாபாரிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்News