தக்கலை பீரப்பா தர்ஹா முன்னுள்ள சாலை சீரழிந்து மழை நீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் அல்லல் படுகின்றனர்.
கடந்த பல வாரங்களாக மழை கொட்டி தள்ளுகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. கிராம நகர பகுதிகளில் சரியான கழிவு நீரோடை இல்லாததாலும் பல இடங்களில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாலும் சாலைகள் சீரழிந்து பொதுமக்களுக்கு மரண பயத்தை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட மேட்டுக் கடையிலிருந்து மார்க்கெட் செல்லும் சாலை குண்டு குழிகள் ஆக மாறி வாகனங்கள் பொதுமக்கள் பயணிக்க முடியாத அவல நிலையில் உள்ளது. இந்நிலையில் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பழைய 10வது வார்டு பகுதியில் உள்ள பழைய அரண்மனை சாலையோரம் வரலாற்று சிறப்புமிக்க பீரப்பா தர்ஹா, மக்காய் பாளையம் மசூதி, கடைகள், வீடுகள் என ஏராளம் உள்ளது. இதனால் மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து எந்நேரமும் அதிகமாக காணப்படும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் போடப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவால் மார்ச் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மும்மத வழிபாட்டுத் தலங்கள் செயல்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. பல மாதங்களாக அரண்மனை சாலையோரம் மூடப்பட்டிருந்த பீரப்பா தர்ஹா, மசூதி ஆகியவை செயல்படத் துவங்கின. இதனால் மக்கள் அங்கு வர துவங்கினர். இந்நிலையில் கடந்த பல வாரங்களாக பெய்துவரும் மழையால் தர்ஹாவின் முன்னால் செல்லும் சாலை பல்லாங்குழி ஆக மாறியுள்ளது. இதனால் மழைநீர் மரண குழிகளில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் தர்ஹா மற்றும் மசூதிக்கு மக்கள் தங்கு தடையின்றி வந்து செல்ல முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் பல இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி தவித்தனர். பல மாதங்களுக்குப் பின் தர்ஹா மற்றும் மசூதிக்கு வந்து செல்லும் மக்களுக்கு சாலையின் அவலநிலை கடும் கோபத்தை உருவாக்கி உள்ளது. ஆகவே வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து மக்களை காக்க சம்பந்தப்பட்ட துறை தலையிட்டு பழுதடைந்த சாலையை சீர் செய்ய வேண்டும். இல்லையென்றால் பல அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆதரவுடன் வாழை நடுதல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.