ஆழமான கிணறு அழிந்து போனது காசு கொடுத்து தண்ணீர் கவலையில் பொதுஜனங்கள்..
Views - 298 Likes - 0 Liked
-
கல்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்னால் உள்ள கிணற்றைசுத்தப்படுத்தி அரசு அலுவலகங்களில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்குளம் தாலுகா அலுவலக வளாகத்தினுள் சார் பதிவாளர், கருவூலம், வட்ட வழங்கல், ஆதிதிராவிடர், கோட்ட ஆயம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும் ஆதார், இ சேவை மையங்களும் உண்டு. அரசு அலுவலகங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அரசு பணி செய்து வருகின்றனர். இதனால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய அரசு அலுவலகங்களை நாடி வருவதுண்டு பொதுமக்கள் நலன் கருதி வளாகத்தினுள் கழிவறையும் ஒன்றும் உள்ளது. தற்போது அலுவலகம் தேடி வரும் பொதுமக்கள் தங்கள் கைகளில் குடிதண்ணீரை பாட்டில்களில் கொண்டு வருகின்றனர். இது போன்று அரசு ஊழியர்களும் தங்களுக்கு தேவையான குடிநீரை வீடுகளிலிருந்து கொண்டு வருகின்றனர். ஆனால் கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் மிகவும் கஷ்டப்படுவதாக பேசப்படுகிறது. கேன்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி தங்களது தேவையை பூர்த்தி செய்கின்றனர். அதே வேளையில் பொதுமக்கள் தண்ணீரை வாங்கி கழிவறைக்குச் செல்ல முடியுமா? என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்களிடையே எழுந்துள்ளது. அதேவேளையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கிணறு ஒன்று கல்குளம் தாலுகா அலுவலகம் முன் உள்ள கிராம அலுவலகம் பக்கம் உள்ளது. இந்தக் கிணற்றிலிருந்து ஒரு காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள், திரளான கடைகள் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். அப்போது கிணறு சுத்தமாக பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு முன் பாதுகாப்புச் சுவர் எழுப்பப்பட்ட நிலையில் பழைய நிலை மாறியது. பொதுமக்கள் கிணற்றை கண்டுகொள்வதில்லை. கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்துக்கொண்டு போவதுமில்லை. தற்போது வரலாற்று சிறப்புமிக்க இந்த கிணற்றின் மேல் பாகம் இரும்பு அழியால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலமரம் ஒன்று வளர்பிறை போல் வளர்ந்து வருகிறது. கிணற்றில் உள் பக்கம் உள்ள சுவர்களில் ஏராளமான குற்றுச் செடிகள் வளர்ந்துள்ள நிலையில் தண்ணீரின் மேல் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதக்கின்றன. ஆகவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை தலையிட்டு கிணற்றை சுத்தம் செய்து மரத்தை வெட்டி மாற்றி சீர் செய்ய வேண்டும். மேலும் குடிநீர் குழாய்களை இணைத்து தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இதனால் நீர் வளம் பெருகும் மக்கள் நலன் காக்கப்படும் என பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது.
News