மண்டைக்காடு புதூர் கடலில் மூழ்கி மாணவன் மாயம் தேடும் பணி தீவிரம்
Views - 263 Likes - 0 Liked
-
மண்டைக்காடு புதூர் கடலில் மூழ்கி 5ம் வகுப்பு மாணவன் மாயமானார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சகாய ராபின்(39). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மகன்கள் ரோகன்(13), ரோகித்(10). ரோகித் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அபின், ராகுல், சர்ஜன் ஆகியோருடன் ரோகித், ரோகன் ஆகியோர் வீட்டு முன் உள்ள கடலில் மரக்கட்டையை போட்டு விளையாடி குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எழுந்த அலை ரோகித் பிடித்து கொண்டிருந்த மரக்கட்டையை இழுத்து சென்றது. இதனால் ரோகித் கரையேற முடியாமல் நீரில் தத்தளித்தான். இதைப்பார்த்த அண்ணன் ரோகன் உடனே வீட்டிற்கு சென்று தந்தை சகாய ராபினை அழைத்து வந்தான். அதற்குள் ரோகித் கடலில் மூழ்கி விட்டான். உறவினர்கள் வள்ளத்தில் சென்று கடலில் மூழ்கிய ரோகித்தை தேடினர். ஆனால் ரோகித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மண்டைக்காடு எஸ்.ஐ. முத்துகிருஷ்ணன், குளச்சல் மரைன் எஸ்.ஐ. ஜாண் கிங்சிலி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கடலில் தேடினர். என்றாலும் ரோகித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து ரோகித்தின் உறவினர்கள் மற்றும் முத்து குளிக்கும் நீச்சல் வீரர்கள் கடலில் மாயமான ரோகித்தை தேடி வருகின்றனர். இச் சம்பவம் மண்டைக்காடு புதூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News