" “If opportunity doesn't knock, build a door.”"

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்ப் - ஜோ பைடன் இடையே காரசார விவாதம்

Views - 266     Likes - 0     Liked


  • அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 3 முறை நேருக்கு நேர் விவாதம் நடத்துவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டிரம்ப்-ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான முதல் விவாதம் நேற்று தொடங்கியது.ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்ட் நகரில் இந்த விவாதம் நடந்தது. ‘பாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சியின் நெறியாளர் கிறிஸ் வலாஸ் இதில் நடுவராக இருந்து விவாதத்தை நடத்தினார். வரிவிதிப்புகள், உயிர்காக்கும் மருந்துகளின் விலை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், டிரம்ப் அரசு அறிவித்த மருத்துவ காப்பீடு திட்டம், பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் நேருக்கு நேராக விரிவான விவாதம் நடத்தினர். அப்போது நெறியாளரை மீறி இரு தலைவர்களும் ஒருவரையொருவர் வசைபாடி காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

    விவாதத்தை முதலில் தொடங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் “டிரம்ப் எது கூறினாலும் அது பொய்யாகவே உள்ளது. அவர் இதுவரை கூறியது எல்லாமே பொய்தான். நான் அவரது பொய்களை கூற இங்கு வரவில்லை. ஏனென்றால் அவர் ஒரு பொய்யர் என்பது அனைவருக்குமே தெரியும்” என்றார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக டிரம்ப் ஏதோ பேச முற்பட்டார். ஆனால் ஜோ பைடன் அதற்கு அனுமதி அளிக்காமல் தனது பேச்சை தொடர்ந்தார். சீனாவுடனான டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஒப்பந்தம் அதன் தேவையை பூர்த்தி செய்யவில்லை என குற்றம் சாட்டினார். டிரம்ப் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சீனா உள்ளிட்ட பிற வெளிநாட்டு நலன்களிடமிருந்து பல மில்லியன் கணக்கான மோசமான லாபத்தை ஈட்டியதாக குற்றம் சாட்டினார்.

    அதற்கு ஜோ பைடன் “அது எதுவும் உண்மை இல்லை. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஊழல் குறித்து பேசினால் இன்று இரவு முழுவதும் பேசலாம். ஆனால் இங்கு அது அவசியமில்லாதது” என்றார். ஆனால் டிரம்ப் ஹண்டர் பைடன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஜோ பைடன் டிரம்பை பார்த்து “வாயை மூடுங்கள்” என கத்தினார். இதனால் அரங்கமே சற்று அதிர்ச்சி அடைந்தது. அதனைத் தொடர்ந்து தலைவர்கள் இருவரும் மேடை நாகரிகத்தை கடைப்பிடிக்கும்படி நெறியாளர் அறிவுறுத்தினார்.

    அதன் பின்னர் டிரம்ப் இடையில் குறுக்கிடாமல் அமைதி காத்தார். ஜோ பைடன் தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது “கொரோனா தொற்றால் 2 லட்சம் பேர் அமெரிக்காவில் இறந்துள்ளார்கள். இதுவரை வேறு எந்த நாட்டிலும் இதுபோன்றதொரு பலி எண்ணிக்கை இல்லை. கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஜனாதிபதிக்கு எந்த திட்டமும் இல்லை. அந்த வைரஸ் எத்தனை கொடூரமானது என்பது பிப்ரவரி மாதமே டிரம்புக்கு தெரியும். எனினும் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்க தவறிவிட்டார்” என குற்றம்சாட்டினார்.

    அதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், “ஒரு வைரசை கையாளும் விதத்தில் எங்கள் ஆட்சியில் செய்ததை போல் ஒபாமா ஆட்சியில் இதுவரை செய்ததில்லை. நல்லது செய்வது என்பது உங்கள் ரத்தத்திலேயே இல்லை. பாதுகாப்பு கவசம், முக கவசம், செயற்கை சுவாசக் கருவி என அனைத்தும் இருப்பு வைத்திருந்தோம். அதேபோல் கொரோனா தடுப்பூசி விவகாரத்திலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கான சிகிச்சை முறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

    இப்படியாக 90 நிமிடங்களுக்கு இரு தலைவர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.

    News