தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி மாவட்டம் வருகை தருவதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் தயார் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 13 ம் தேதி மாலையில் கன்னியாகுமரி மாவட்டம் வருகை தருகிறார். அன்று இரவு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 14 ம் தேதி காலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த பணிகளை மக்கள் செயல்பாட்டுக்கு திறந்தும் வைக்கிறார். அதன்பிறகு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொரோனா முன்னேற்பாடுகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகை மற்றும் கலெக்டர் அலுவலகம் தயார் படுத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலமும் முதல்வர் தங்கும் இடம் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் அனைத்து பகுதிகளும் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது முதல்வர் வந்து இறங்கும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்ற அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி சார்பில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கை கழுவுவதற்காக குடிநீர் தொட்டிவைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் டிஸ்லரி ரோடு சரி செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் தயார் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.