பாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி விக்ரகங்கள்
Views - 254 Likes - 0 Liked
-
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்று விட்டு பத்மநாபபுரம் சுவாமி விக்ரகங்கள் வந்தடைந்தது. திருவனந்தபுரத்துக்கு திருவிதாங்கூரின் தலைநகரான பத்மநாபபுரம் மாற்றப்பட்டது முதல் நவராத்திரி விழா அங்கு வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
14 ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திலிருந்து எளிய முறையில் சரஸ்வதி அம்மன், வெள்ளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகியவை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 14 ம் தேதி குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் தங்கியது. 15 ம் தேதி அங்கிருந்து சிறப்பு பூஜைக்கு பின் களியக்காவிளை சென்றடைந்தது. அங்கிருந்து பாரம்பரிய முறைப்படி மூன்று சுவாமி விக்ரகங்கள் நெய்யாற்றின் கரை கிருஷ்ணன்கோவில் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து மூன்று விக்கிரகங்களும் மூன்று இடங்களில் இருப்பு வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. நவராத்திரி விழா 17 ம் தேதி துவங்கி 25 ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் 26 ம் தேதி விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் உடன் முடிவு பெற்றது. 27 ம் தேதி 3 சுவாமி விக்கிரகங்களும் ஒருநாள் நள்ளிரவுக்கு உட்படுத்தப்பட்டது. 28 ம் தேதி பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் நோக்கி புறப்பட்டது. 29 ம் தேதி களியக்காவிளை வந்து சேர்ந்த சுவாமி விக்ரகங்களுக்கு பக்தர்கள் சிறப்பான முறையில் சமூக இடைவெளியுடன் வரவேற்பு கொடுக்க குழித்துறை மகாதேவர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின் அதிகாலையில் புறப்பட்ட சுவாமி விக்ரகங்கள் மார்த்தாண்டம், இரவிபுதூர்கடை, சாமியார் மடம், அழகியமண்டபம், வைகுண்டபுரம், மணலி, சாரோடு வழி பத்மநாபபுரம் கோட்டை வாசலை காலை 9:30 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வாசல் முன் நின்ற பக்தர்கள் சுவாமி விக்கிரகங்களை வணங்கி வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சரஸ்வதி அம்மன் விக்ரகம் பத்மநாபபுரம் அரண்மனையில் கொலு வைக்கப்பட்டது வெள்ளிமலை முருகன் குமாரகோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நேற்று குழித்துறை முதல் குமாரகோவில் வரை சாலையோரம் உள்ள வீடுகளில் உள்ள பக்தர்கள் வாசல் தோறும் நின்று 3 சுவாமி விக்கிரகங்களுக்கும் சிறப்பான வரவேற்பு கொடுத்து வணங்கி நின்றனர். அதே வேளையில் மாலையில் தான் சுவாமி விக்ரகங்கள் பத்மநாபபுரம் வந்தடையும் என நினைத்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி விக்கிரகங்களின் வருகை நேர மாற்றத்தால் மன வருத்தத்துடன் சுவாமி விக்கிரகங்களை பார்க்க முடியாமல் சோகத்துடன் திரும்பி சென்றனர்.
News