அடர்ந்த காடுகள், நன்னீர்நிலைகள், கடல் பகுதிகள், காயல் பகுதிகள் மற்றும் மலைகளை கொண்டது குமரி மாவட்டம். அதோடு ஆண்டுக்கு இரு பருவமழை பொழிவதால் இயற்கையாகவே குமரி மாவட்டம் பசுமையாக காட்சி அளிக்கிறது. எனவே குமரி மாவட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் படையெடுப்பது வழக்கம். அவ்வாறு வரும் வெளிநாட்டு பறவைகள் இங்குள்ள குளங்கள், காயல்கள் மற்றும் காட்டு பகுதிகளில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு செல்லும்.
குமரி மாவட்டத்துக்கு வெளிநாட்டு பறவைகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வரும். பின்னர் நவம்பர் மாத இறுதியில் பறவைகள் இங்கிருந்து புறப்பட்டு விடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் காரணமாக மழை காலம் மாறி பெய்து வருகிறது. இதன் காரணமாக பறவைகளும் தாமதமாக வந்து தாமதமாகவே செல்கின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளிநாட்டு பறவைகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. பறவைகள் வசிக்கும் பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் பறவைகள் வரவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்துக்கு பறவைகள் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது செங்கால் உள்ளான், சதுப்பு மணல் உள்ளான், பைங்கால் உள்ளான், சாதா டேர்ன், கிருதா டேர்ன், பெரிய கொண்டை டேர்ன் மற்றும் பூநாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான பறவைகள் மணக்குடி காயலில் வசித்து வருகின்றன. மேலும் சுசீந்திரம் குளத்திலும் வெளிநாட்டு பறவைகளை காண முடிகிறது.
மணக்குடி காயலில் வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் இரை தேடி தண்ணீரில் நீந்தி செல்லும் காட்சி கண்களை கவரும் விதமாக உள்ளது. எனவே காலை மற்றும் மாலையில் அப்பகுதி மக்கள் மணக்குடி பாலத்தில் நின்றபடி பறவைகளை பார்த்து ரசிக்கிறார்கள். அதோடு குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தில் வந்து விதவிதமான மற்றும் வண்ணமயமான பறவைகளை பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார்கள்.
இதுபற்றி பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் குறைவான வெளிநாட்டு பறவைகள் மட்டுமே வந்தன. ஆனால் தற்போது பறவைகள் வரத்து சற்று அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் மழை பெய்ய தொடங்கி இருப்பதால் மேலும் எண்ணற்ற வகை பறவைகள் வர வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு வரும் பறவைகளை பொதுமக்கள் அச்சுறுத்த கூடாது. அவற்றை வேட்டையாடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்றார்.